தலைமைக்கு தலையாட்டி பொம்மையாக இருக்க மாட்டேன்... காங்கிரசுக்கு எதிராக குரல் கொடுத்த குஷ்பு..!

By vinoth kumarFirst Published Jul 30, 2020, 5:43 PM IST
Highlights

புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு தீவிர அரசியலுக்கு வந்தவர் குஷ்பு. எம்பி, மத்திய அமைச்சர், எம்எல்ஏ, மாநில அமைச்சர் என பல கனவுகளுடன் திமுகவில் இணைந்தார்.  கலைஞரின் அபிமானம் பெற்று திமுகவின் தலைமை கழக பேச்சாளர் ஆனார். நட்சத்திர பேச்சாளராக அங்கீகரிக்கப்பட்ட குஷ்பு, திமுகவின் பிரச்சார பீரங்கியாகவும் செயல்பட்டார். 

வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திமுக ஒரு ஜனநாயக இயக்கம், கட்சியின் அடுத்த தலைவர் என்பதெல்லாம் பொதுக்குழுவில்தான் முடிவெடுக்கப்படும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் கூட பேசத் தயங்கும் கருத்துகளை தெரிவித்தார். இதனால் ஸ்டாலின் தரப்பு குஷ்பு மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.2014 நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டது ஸ்டாலின் தரப்பு. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி முழுக்க முழுக்க ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. 

இதனால் தனக்கு திமுகவில் எதிர்காலம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து, ராகுலின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால், 2014ல் காங்கிரசில் இணைந்த குஷ்புவுக்கு தற்போது வரை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வாய்ப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. 


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மீது குஷ்பு அதிருப்தியில் இருந்து வருவதாகவும் அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக ஏசியா நெட் கூறியிருந்தது. அதனை உறுதி செய்தது போல் இன்று அவர் புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு ட்வீட்டை பதிவு  செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த குஷ்பு;- தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் இருக்க மாட்டேன். தலைமையின் நிலைப்பாட்டிற்கு மாறாக கருத்து கூறியதற்கு ராகுலிடம் மன்னிப்புக் கேட்கிறேன். கட்சித் தொண்டர் என்பதை விட நாட்டின் குடிமகனாக எனது கருத்தை பதிவிட்டுள்ளேன்.  இந்த புதிய கல்விக் கொள்கை உண்மையிலேயே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் கொள்கைக்கு எதிரான கருத்து கூறிய குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

click me!