
நடிகர் கமல் ஹாசன் ஒரு ஜீரோ, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ஒரு ஜீரோ இருவரும் சேர்ந்தால் ஒன்றும் நடக்காது என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கிண்டல் செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குபின் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை நிரப்ப பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களை அவ்வப்போது கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில் நடிகர் கமல் ஹாசன், தமிழக அரசியல் சூழல் குறித்தும், ஆளும் அ.தி.மு.க கட்சி குறித்தும் கடுமையான கருத்துக்களை முன் வைத்து வருகிறார். அரசியலுக்கு விரைவில் வருவேன் என்றும் கமல் ஹாசன் கூறி வருகிறார். சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து பேச்சு கமல்ஹாசன் பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சென்னை வந்து நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினார்.
இருவரும் ஒரு மணிநேரம் பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தனர்.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு குறித்து சுப்பிரமணிய சாமி எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது-
நடிகர் கமல் ஹாசன் மிகப்பெரிய ஜீரோ, ஆடம்பரமான முட்டாள். டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் மற்றொரு மிகப்பெரிய ஜீரோ. ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால், என்ன வரும். பள்ளிக்கூடத்தில் படித்து இருப்போம், இரு ஜீரோவையும் கூட்டிணால் என்ன கிடைக்கும். ஒன்றும் இருக்காது.
எதற்காக ஊடகங்கள் இதுபோன்ற நடிகர்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் முன், பயிற்சி எடுத்தால் கூட அவர்கள் தோல்வி அடைந்து விடுவார்கள். ஜெயலலிதா 20 ஆண்டுகள் அரசியலில் இருந்த பின்பு தான் அவரால் ஒரு தலைவராக முடிந்தது. இதுபோன்ற சந்திப்புகளுக்கு ஊடகங்கள் அதிகமான முக்கியத்துவத்தை அளிக்காதீர்கள்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.