மக்களுக்கு நல்லது செய்யவே விஷால் அரசியலுக்கு வருகிறார் என்ற நடிகர் டெல்லி கணேஷ், தமிழக அரசின் சூழ்நிலை தற்போது சரியில்லை என்றும், மத்திய அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியல் பாரதியாரின் 136 பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாரதியார் குறித்து சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. விழாவில், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்ப்பட்டது. இந்த விழாவில் நடிகர் டெல்லி கணேஷ், கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். ‘
இதன் பின்னர், நடிகர் டெல்லி கணேஷ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது; தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்றார்.
வாக்களிப்பது எப்படி ஜனநாயக கடமையோ, தேபோல தேர்தலில் நிற்பதும் ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்று கூறினார். மேலும், யாரும் தேர்தலில் நிற்கலாம். இதற்கு கட்டுப்பாடும் இல்லை என்றார்.
தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற கூச்சல், குழப்பம் நாகரிகமான செயல் அல்ல என்று கூறிய அவர், எந்த பிரச்சனையாக இருந்தாலும், சமரசமாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது என்றார்.
நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டி, கட்டடத்துக்கு நிதி திரட்டுவதற்காக வரும் ஜனவரி மாதம் மலேசியா, சிங்கப்பூரில் கலை விழா ஒன்று நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார். திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகர் விஷால் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்க நல்லது செய்வதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளார். ஒருவர் மீது மோசடி குறித்து யார் வேண்டுமானாலும் புகார் சொல்லலாம். ஆனால், அந்த புகாரில் உண்மை இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
அதேபோல நடிகர் விஷால் மீது கூறப்பட்ட மோசடி புகாரிலும் உண்மை உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என்றார். விஷால் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறிய டெல்லி கணேஷ், தமிழக அரசின் சூழ்நிலை தற்போது சரியில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அரசை ஏமாற்ற இனி யாரும் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது என்றும் டெல்லி கணேஷ் கூறினார்.