
அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர உள்ள புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு எந்தவகையிலும் சளைத்ததாக இருக்காது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வி உயரதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு எந்தவகையிலும் சளைத்ததாக இருக்காது. இந்தியாவே வியக்கும் வகையிலும் சிபிஎஸ்இ-யே மிரளும் வகையிலும் இருக்கும்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருகின்றன. பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளால், விரைவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகும்.
மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் 48 மணிநேரத்தில் வழங்கப்படும். ஆசிரியர்கள்-மாணவர்கள் இடையேயான சில வன்முறை சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு யோகா பயிற்சியுடன் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும்.
மன அழுத்தம் காரணமாக இத்தகைய செயல்கள் நடக்கின்றன. அவற்றை போக்கவும் மாணவர்கள்- ஆசிரியர்கள் எப்படி பழக வேண்டும். கீழ்படிய வேண்டும் என்பது குறித்து பல்வேறு போதனைகளுடன் புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதற்கும் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கும் விழாக்கள் கொண்டாடுவதிலுமே கவனம் செலுத்தும் அமைச்சர்கள் மத்தியில், செங்கோட்டையனின் செயல்பாடுகள் மக்களிடையே வரவேற்பைப் பெறுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.