தி.மு.க.வை விட்டு வெளியே பாயும் விடுதலை சிறுத்தை...? இரக்கமே காட்டாத ஸ்டாலின்... அதிரடியாய் முடிவெடுக்கும் திருமா?

By Vishnu PriyaFirst Published Feb 13, 2019, 3:20 PM IST
Highlights

தி.மு.க.விலிருந்தும் சில கட்சிகள் எங்களிடம் வந்து சேர்வார்கள். பொறுமையாய் இருங்கள் நிறைய ஆச்சரியம் நடக்கும்!’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கொளுத்திய அரசியல் பட்டாசின் பின்னணி இப்போது புரிய துவங்கியுள்ளது.

’தி.மு.க.விலிருந்தும் சில கட்சிகள் எங்களிடம் வந்து சேர்வார்கள். பொறுமையாய் இருங்கள் நிறைய ஆச்சரியம் நடக்கும்!’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கொளுத்திய அரசியல் பட்டாசின் பின்னணி இப்போது புரிய துவங்கியுள்ளது. 

தி.மு.க. கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கழன்று அ.தி.மு.க. நோக்கியோ அல்லது அ.ம.மு.க. நோக்கியோ செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதில் சுவாரஸ்யமென்ன என்றால், வி.சி.க.வை வெளியே துரத்துவதே ஸ்டாலின் தான்! என்கிறார்கள்.

  

ஏன் இந்த முடிவு?.... தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது சக நிர்வாகிகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் ஓடிக் கொண்டே இருந்தது. இதை நமது ஏஸியாநெட் இணைய தளம் தொடந்து கண்காணித்து எழுதிக் கொண்டே இருக்கிறது. தி.மு.க.வுடன் தான் தேர்தல் கூட்டணி! ஸ்டாலினை முதல்வராக்குவதே இலக்கு! என்று திருமாவளவன் ஒருவருடத்துக்கு முன்பாகவே வெளிப்படையாக அறிவித்தும் கூட ஸ்டாலின் மனம் இன்னமும் மாறவில்லை. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் தாங்கள் மிக குறைந்த இடங்கள் எண்ணிக்கையில் ஆட்சியை இழப்பதற்கு திருமா, வைகோ அமைத்த மக்கள் நல கூட்டணிதானே காரணம்! என்பதை ஸ்டாலினால் இன்னமும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லையாம். அதனால்தான் திருமா இவ்வளவு இறங்கிவந்தும் கூட ஸ்டாலின்  இரக்கம் காட்டவே மாட்டேங்கிறார் என்கிறார்கள். 

‘வைகோ, திருமா இருவரும் எங்கள் நண்பர்களே. கூட்டணியில் இல்லை.’ என்று துரைமுருகன் அறிவித்தது, அதன் பின் இவர்கள் இருவரும் ஸ்டாலினை காண ஓடியது எல்லாமே தி.மு.க.வின் பழிவாங்கும் அரசியல்! என்று கூறுகின்றனர் விமர்சகர்கள். ஸ்டாலின் ஓரளவு சமாதானமாகி திருமாவை ஏற்றுக் கொண்ட நேரத்தில், அவர் ராகுலை சந்தித்து புது அரசியல் லாபி செய்த விஷயம் மீண்டும் விரிசலை உருவாக்கியதாம். இதை சரிகட்ட, திருச்சியில் தாங்கள் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாட்டில் ஸ்டாலினை பிரதானப்படுத்தியும் கூட அவர் இறங்கி வர மறுக்கிறாராம். 

இதையெல்லாம் விட உச்சமாக சமீபத்தில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடந்த ஆதித்தமிழர் வெள்ளிவிழா அரசியல் எழுச்சி மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டது திருமாவை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மேற்கு தமிழகமான, கொங்கு மண்டலத்தில் ஆதித்தமிழர் என்று அழைக்கப்படும் அருந்ததியர் இன மக்களின் வாக்கு வங்கி மிக வலுவானது. இந்த சமுதாய மக்களை வைத்து அரசியல் கட்சி நடத்துபவர்களில் முக்கியமானவர் அதியமான்.  

இவர் கருணாநிதி காலத்தில் இருந்தே தி.மு.க.வின் ஆதரவாளர். இப்போது ஸ்டாலினிடம் பசையாய் ஒட்டிக் கொண்டுள்ளார். ஆதித்தமிழர் கட்சி நடத்திய இந்த மாநாட்டுக்கு முழு செலவு செய்ததோடு, பெரியளவில் கூட்டம் கூட ஏற்பாடு செய்ததும் தி.மு.க.தானாம். எல்லாமே வி.சி.க.வை கடுப்பேற்றி, அசிங்கப்படுத்துவதற்காகத்தான் என்கிறார்கள். முழு செலவையும் ஸ்டாலினின் நிழல்களில் ஒன்றான எ.வ.வேலுதான் ஏற்றிருக்கிறார் என்று வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. இந்த மாநாட்டில் பேசிய ஸ்டாலினும் அருந்ததியர்களின் நலனை பற்றி பெரிதாய் சிலாகித்துப் பேசியதால் வி.சி.க. கடும் அதிருப்தியில் உள்ளது. 

நீங்கள் இல்லாவிட்டால் என்ன, எங்களிடம் ஆதித்தமிழர் பேரவை எனும் தலித் கட்சி இருக்கிறது என்று காட்டவே ஸ்டாலின் இப்படி பிஹேவ் செய்திருப்பதாக பொங்கும் திருமாவின் தளகர்த்தர்கள் “தலைவரே ஸ்டாலின் இன்னும் மாறலை, நம்மை உள்ளே வெச்சுக்கிட்டே அசிங்கப்படுத்துறார். நாமா கூட்டணியை விட்டு வெளியில் போகணும்னு நினைக்கிறார். இப்படி அவமானப்படுறதுக்கு பேசாம வெளியில போயிடலாம். அருந்ததியர்கள் மேற்கு மாவட்டங்களில் மட்டும்தான் இருக்காங்க. நாமோ தமிழகம், புதுச்சேரின்னு விரிஞ்சு கிடக்குறோம். நாம கிளம்புனா நஷ்டம் ஸ்டாலினுக்குதான். வெளியில போயி அவருக்கு வேட்டு வைப்போம்.” என்று பொங்கியிருக்கிறார்கள். 

மெளனமாக கேட்டுக் கொண்டிருக்கும் திருமா இதுவரையில்  உறுதியான முடிவெடுக்கவில்லையாம். ஆனால் சில அதிரடிகளுக்கு தயாராகிறாராம்.  இப்படி சித்து விளையாட்டைக் காட்டி தங்களை வெளியே அனுப்புவதும், மீறி உட்கார்ந்தால் சீட் எண்ணிக்கையில் கை வைப்பதும்தான் ஸ்டாலினின் எண்ணம் என்பது திருமாவுக்கு தெளிவாக புரிந்துவிட்டது. சிறுத்தையின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!