
இரட்டை இலை லஞ்ச வழக்கில் டிடிவி.தினகரனுக்கு இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கும்படி கடந்த வாரம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதன் மீதான விசாரணை நீதிபதி பூனம் சவுத்திரி தலைமையில் நடைபெற்றது. அப்போது சுகேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறி ஜாமீன் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த டெல்லி போலீஸ் தரப்பு,சுகேஷூக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இவ்வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் சுகேஷ் சந்திரசேகரர் தொடர்ந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பூனம் சவுத்திரி தெரிவித்துள்ளார். இரட்டை இலை லஞ்ச வழக்கில் டிடிவி - சுகேஷ் சந்திரசேகரர் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட விவகாரம் இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்ததுள்ளது.