அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்குப் பதில் புதிய பொருளாளர் நியமனம் பற்றியும் பேசப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சசிகலா - ஓ. பன்னீர்செல்வம் என இரண்டாக உடைந்தது. பிறகு சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஓ. பன்னீர்செல்வத்தோடு எடப்பாடி பழனிச்சாமி கைகோர்த்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓபிஎஸ் - இபிஎஸ் முறையே ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். ஆனால், தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் பெரும்பான்மையான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவை பெற்றுள்ள இபிஎஸ், பொதுச்செயலாளர் பதவியை நெருங்கிவிட்டார். இதற்காக ஜூலை 11 அன்று மீண்டும் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட இபிஎஸ் தரப்பு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதையும் படிங்க: அதிமுகவை வழி நடத்த உண்மையில் யாருக்கு உரிமை.? 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயிலில் தீர்வு.!
ஆனால், இந்தப் பொதுக்குழுவை நடத்த விடாமலும் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் உருவாகாமல் இருக்கவும் எல்லாவிதமான முயற்சிகளையும் ஓபிஎஸ் தரப்பு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓபிஎஸ் தொண்டர்களைச் சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். டெல்லியில் பாஜக உதவியுடன் ஏதாவது காரியம் சாதிக்க முடியுமா என்ற செயல் திட்டத்திலும் ஓபிஎஸ் இருக்கிறார். அதிமுக தொண்டர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பும் தினந்தோறும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரத்தையும், இபிஎஸ் பொதுச்செயலாளராவதைப் பற்றியும் பேசப்பட்டன. ஆனால், அதைவிட ஓபிஎஸ் சட்ட ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தினால், அதை எப்படிச் சமாளிப்பது என்றே அதிகம் பேசப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர் அணியைத் தயார் செய்து வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதுதொடர்பாக சில யோசனைகளை கூட்டத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயங்களை கவனிப்பதற்காக சி.வி.சண்முகம்,. பாபு முருகவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் அணி தாயாராக இருப்பதாகவும் கூட்டத்தில் சி.வி.சண்முகம் தெரிவித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்ட இன்னொரு விஷயம், சசிகலாவை போல ஓபிஎஸையும் எப்படி கட்சியிலிருந்து ஓரங்கட்டுவது என்பது பற்றிதான் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் முகத்தை டாராக கிழித்து எடப்பாடி ஆதரவாளர்கள் அட்ராசிட்டி.. அலறி அடித்து புது பேனர் வைத்த தலைமை கழகம்...
சசிகலாவை பொதுச்செயலாளராக்கிய பிறகு அவர் சிறைக்குச் சென்றதால், சசிகலாவாலும், அவரால் முன்னிறுத்தப்பட்ட டி.டி.வி. தினகரனையும் சுலபமாக ஓரங்கட்ட முடிந்தது. ஆனால், ஓபிஎஸ் அப்படி அல்ல. இப்போதே சகல இபிஎஸ்ஸுக்கு எதிராக சகல அஸ்திரங்களையும் ஏவி வருகிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பு சொன்னாலும், அதற்கு முன்பு இருந்த பதவிகள் உயிர்ப்போடு இருப்பதை இபிஎஸ் தரப்பும் ஆமோதித்துள்ளது. அதன் காரணமாகத்தான் தற்போது ஓபிஎஸ் பொருளாளர் மட்டுமே என்று சி.வி. சண்முகம் தெரிவித்திருந்தார். இந்தப் பதவியை அவருக்கு வழங்கியது ஜெயலலிதா. ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் உருவாகும் நிலையில், கட்சியில் ஓபிஎஸ் இருந்தால் அது சிக்கலாகவே இருக்கும் என்பதை பலரும் இக்கூட்டத்தில் எடுத்துச் சொன்னதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, முதல் கட்டமாக இபிஎஸ்ஸை தற்காலிக பொதுச்செயலாளராக்கிவிட்டு, அவர் பொறுப்பேற்ற பிறகு பொருளாளர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பதவிக்கு கே.பி. முனுசாமி அல்லது ஜெயக்குமார் நியமிக்கலாம் என்பது வரை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிமுகவில் சொல்கிறார்கள். நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரும், ‘கூட்டத்தில் பேசப்பட்டவை ரகசியம்’ என்று கூறிவிட்டு சென்றார். ஜூலை 11 அன்று நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்திலும் அதன் பிறகும் பல அதிரடிகளை நடத்திக் காட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால். இதையெல்லாம் ஓபிஎஸ் முறியடிப்பாரா என்பதுதான் கேள்வி!
இதையும் படிங்க: பன்னீர் செல்வம் கண்ணீர் செல்வமாக மாறிவிட்டார்..! இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.. ராஜன் செல்லப்பா அதிரடி