ADMK அதிமுக சட்ட விதிகளில் அதிரடி மாற்றம்... பாமக கற்றுக்கொடுத்த பாடம்... வீடியோவா போடுறீங்க..?

By Thiraviaraj RMFirst Published Dec 1, 2021, 12:53 PM IST
Highlights

செயற்குழு கூட்டத்தில், அதிமுக சட்ட விதிகளில் பல அதிரடி மாற்றங்களை செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு பரபரப்புகளுக்கிடையே அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், அங்கு சென்ற உறுப்பினர்கள் எவரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளார்கள்.

கடந்த நவம்பர் 24ஆம் தேதி அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா, தற்போதைய தலைமை வலிமையற்றதாக இருப்பதாகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காக சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதனைக் கேட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது. அன்வர் ராஜாவை ஒருமையில் குறிப்பிட்டு, "சசிகலா ஆளையெல்லாம் ஏன் பேச விடுறீங்க?" என்று குரல் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்தக் கூட்டத்தில் கடுமையான விவாதங்கள் நடந்தன. இந்த நிலையில்தான் அன்வர் ராஜாவை நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க வழிகாட்டும் குழுவில் உறுப்பினராக இருந்த சோழவந்தான் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பா.ஜ.கவில் சமீபத்தில் இணைந்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அன்வர் ராஜா நீக்கப்பட்டிருப்பது தொடர்பான ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு அ.தி.மு.கவின் செயற்குழு கூட்டம் நடக்கவிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில் அ. அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 

இது இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.  ஏற்கெனவே, பாமக ஆலோசனை குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள்  செல்போனில் பதிவு செய்த வீடியோக்கள் இப்போது வரை வைரலாகி வருகிறது. புஜபலம், தேர்தலில் போட்டியிட ஆளில்லாவிட்டால் அந்தமானில் இருந்து ஆட்களை கூட்டி வந்திருப்பேன். ஆடு மேய்ப்பவர்களை நிர்வாகிகள் ஆக்குவேன் என ராமதாஸ் பேசிய வீடியோக்கள் அனைத்தும் வைரலாகியது. 

பாமகவிற்குள் அவ்வளவு பிரச்னைகள் இல்லாவிட்டாலும் ராமதாஸ் பேசிய வீடியோக்கள் வைரலாகியது. ஆனால், அதிமுகவில் பல்வேறு பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனை யாராவது வீடியோ எடுத்து வெளியிட்டால் மேலும் சிக்கலாகும் என்பதால் யாருக்கும் செல்போன் அனுமதி இல்லை என கண்டிஷன் போட்டுள்ளனர்.

 

இந்நிலையில், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் உள்ள தமிழ் மகன் உசேன், அக்கட்சியின் தற்காலிக அவை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறப்பு தீர்மானம் உட்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அதிமுக பொன்விழாவை தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாட, தொண்டர்களுக்கு அழைப்பு விடுப்பது, தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவது, பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசை வலியுறுத்துதல் மழை வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்க தவறிய திமுக அரசிற்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு கூட்டத்தில், அதிமுக சட்ட விதிகளில் பல அதிரடி மாற்றங்களை செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இந்த சட்ட திருத்தம், இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!