உடம்பெல்லாம் நீல நிறமாக மாறி சிறுமி துடிதுடித்து உயிரிழந்த விவகாரம்.. அமைச்சர் சக்கரபாணி கடும் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Aug 5, 2021, 4:01 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் போலி குளிர்பான தொழிற்சாலைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கூடுதல் காவல் துறை இயக்குனர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார் 

சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மகள் தாரணி(13).  இவர் தன் வீட்டு பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று, குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளார். அதோடு, ரஸ்னா பாக்கெட்டையும் வாங்கி குடித்துள்ளார். இரண்டையும் குடித்த சில நிமிடங்களிலேயே தாரணி வாந்தி எடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் மூக்கில் இருந்தும் ரத்தம் வந்துள்ளது. இதனால் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். அவரது உடம்பெல்லாம் நீல கலரில் மாறி விட்டது. இதை பார்த்து பயந்து போன குடும்பத்தினர், தாரணியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

ஆனால், தாரணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து வந்து, தரணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு தாரணி குடித்த குளிர்பானத்தில் இருந்து கொஞ்சமாக எடுத்து, அதை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், சென்னையை அடுத்த சோழவரத்தில் இயங்கி வந்த தனியார் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தின் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கூடுதல் காவல் துறை இயக்குனர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 1800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலி குளிர்பான தொழிற்சாலைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!