
இரட்டை இலை விவகாரத்தில் சசிகலா அணி தரப்பில் 4 லாரிகளில்1,50,000 பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் நீதித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் வேண்டும் என கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அணியினர், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என பிரமாண பத்திரம் தயார் செய்து, கொடுத்துள்ளனர்.
இதேபோன்று, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏற்கனவே 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை, தொண்டர்களின் கையெழுத்துடன் கொடுத்துள்ளனர்.
மேலும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக மீண்டும் 12,600 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது, 4 வது முறையாக எடப்பாடி அணியை சேர்ந்த சி.வி.சண்முகம் 4 லாரிகளில் 1,50,000 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார்.