கமலிடம் ராஜேந்திர பாலாஜி ரவுசு செய்வதன் பின்னணி... ஃபாரீனில் ஆரம்பித்த ஆவின் பகை!

By vinoth kumarFirst Published Nov 12, 2018, 5:09 PM IST
Highlights

தமிழக அமைச்சர்களுக்கு  பொழுது போகவில்லையென்றால், தூக்கிப் போட்டு விமர்சனம் செய்வது கமல்ஹாசனைத்தான். இதை ஒரு ஹாபியாகவே வைத்துள்ளனர். அதிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ஓவர்டைம் போட்டு இந்த ஹாபியை கருத்தாக செய்து வருகிறார். 

தமிழக அமைச்சர்களுக்கு  பொழுது போகவில்லையென்றால், தூக்கிப் போட்டு விமர்சனம் செய்வது கமல்ஹாசனைத்தான். இதை ஒரு ஹாபியாகவே வைத்துள்ளனர். அதிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ஓவர்டைம் போட்டு இந்த ஹாபியை கருத்தாக செய்து வருகிறார். ஏற்கனவே ’அரசியலிலும் சப்பாணிதான் கமல்’ என்று ஓரஞ்சாரம் பார்க்காமல் கமலை நெத்தியடியாய் அடித்தார் கமல். 

இந்த கலக்கத்தில் இருந்து கமல் எழுவதற்குள் இப்போது ‘கட்டப்பொம்மனை போல் மீசையை முறுக்கினால், அரசியலில் தூக்கில் போட்டுவிடுவார்கள்!’ என்று விளாசியிருக்கிறார் விருமாண்டியை. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேசிய பாலாஜி “இந்த தேர்தலோடு கமல்ஹாசனின் கலாச்சாரம் முடிந்துவிடும். வீரபாண்டிய கட்டப்பொம்மனைப் போல் மீசையை முறுக்கினால், அரசியலில் தூக்கில் போட்டுவிடுவார்கள். அரசியல் என்பது கடல். நீச்சல் தெரியாமல் இறங்கி விழிப்பதைப் போல, யார் பேச்சையோ கேட்டு கமல் அரசியலில் இறங்கிவிட்டு, கரையேற முடியாமல் தவிக்கிறார்.

 

ஆனால் அதேவேளையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் எனக்கு பிடிக்கும். நல்ல எண்ணம், கருத்துக்களை சொல்பவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.க.வினருக்கு பிடிக்கும் என முதல்வர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.” என்று இதில் எடப்பாடியையும் இழுத்துவிட்டு, கமல்ஹாசனை போட்டுத் தாக்கியிருந்தார். ராஜேந்திர பாலாஜி தன்னிடம் தொடர்ந்து ரவுசு இழுப்பதை கமல்ஹாசனாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

நேற்று  ஓசூரில் பதிலடி கொடுத்தவர் ‘மக்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நான் மீசையை முறுக்குகிறேன். ஆணவத்தால் அல்ல!’என்றிருக்கிறார். ராஜேந்திர பாலாஜி கமலை தாக்குவதற்கு, கமல் தரும் பதிலடி அவ்வளவு ஷார்ப்பாக இல்லை என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளின் எண்ணம். அதேவேளையில், ஏன் ராஜேந்திர பாலாஜி இப்படி தொடர்ந்து கமலை தாக்கி வருகிறார்? என்பதும் முக்கிய கேள்வியாகி இருக்கிறது.

இதற்கு பதில் தேடி, இருவர் தரப்பின் எல்லைக்குள் நுழைந்து விசாரித்துப் பார்த்தால் ஃபாரீன் பகை ஒன்று வெளிச்சத்துக்கு வருகிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவின் சார்பாக வெளிநாடுகளில் பால் மையங்கள் திறக்கப்பட்டன. இதில் அமைச்சரே கலந்து கொண்டார். பால் மட்டுமல்லாது, தமிழகத்தின் ஆவினால் செய்யப்படும் பால்கோவா! உள்ளிட்ட பதார்த்தங்களும் அங்கே விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவற்றின் துவக்க விழாவுக்காக அமைச்சர் வெளிநாடு செல்ல ஆயத்தமானபோது அதற்கான ஏற்பாடுகளில்  பல விஷயங்களில் உதவி செய்து கொடுத்த என்.ஆர்.ஐ. தரப்பில் சிலர் கமல்ஹாசனுக்கு மிக நெருக்கமானவர்களாம். 

தமிழக ஆவின் கடல் கடந்து வருவதை பற்றி கமல்ஹாசனிடம் அவர்கள் பெருமையாக தெரிவித்தபோது, கமல் தமிழகத்தில் அந்த துறையின் அவல நிலைகள் பற்றி சில விஷயங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்தாராம். அவர்கள் அதிர்ந்து போனார்களாம். அந்த அவலங்களைப் பேசி முடிக்கையில் தன் வழக்கமான ஸ்டைலில் நுணுக்கமாக ஒரு பஞ்ச்! ஒன்றையும் வைத்திருக்கிறார் கமல். இந்த விஷயம் அங்கே மெதுவாக பல நபர்களிடம் பரவியிருக்கிறது. ஆனாலும் ‘தமிழ்நாட்டுல இருந்து அமைச்சர் வர்றப்ப இதை காண்பிச்சுக்க வேண்டாம்.’ என்று தங்களுக்குள் முடிவெடுத்துவிட்டார்கள். 

ஆவின் மற்றும் அதன் அமைச்சர் பற்றி கமல் கொட்டிய விஷயங்களை அறிந்து வைத்திருந்த அந்த வெளிநாடு வாழ் நபர்களில் ஒருவர், நாரதர் வேலை பார்த்துவிட்டார். ராஜேந்திர பாலாஜி வெளிநாட்டுக்கு வந்த இடத்தில் கமல் சொன்ன கமெண்டுகளை உளறிக் கொட்டிவிட்டார் வசமாக. இதைக் கேட்டு கண்கள் சிவந்துவிட்டன ராஜேந்திர பாலாஜிக்கு. ஆத்திரம் மற்றும் ஆதங்கத்தின் உச்சத்துக்கு போனவர், தமிழகம் திரும்பிய பின் துவக்கிவிட்டார் தன் கச்சேரியை.  

என்.ஆர்.ஐ. பார்ட்டிகளிடம் தன்னை அவமானப்படுத்திய கமலை, சொந்த நாட்டு மக்களிடம் கேவலப்படுத்திக் கொண்டே இருப்பதே என் முக்கிய வேலை! என்று கிட்டத்தட்ட சபதமே போட்டாராம் பாலாஜி. அதன் நீட்சிதான் இந்த ‘சப்பாணி, தூக்கு’ கமெண்டுகள்! என்கிறார்கள்.

கமலுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜியின் ரவுசு கமெண்டுகள் இன்னும் தொடருமாம். அதுவும் இதைவிட வெகு வீரியமான வார்த்தைகளை போட்டுக் கொலக்குத்து குத்துவார் இனி என்கிறார்கள். கமலை தாக்கும் அதே வேளையில் ’ரஜினியை பிடிக்கும், அவர் நல்லவர்.’ என்று பாலாஜி பிட்டு போடுவது, கமலின் கடுப்பை அதிகரிக்கத்தான்! என்கிறார்கள் அமைச்சரின் உடன் இருப்பவர்கள். வெளங்கிடும்!

click me!