2ஜி வழக்கில் தேர்தலுக்கு முன்பே ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் சிறைதான்... அதிமுக அமைச்சரின் தாறுமாறு கணிப்பு..!

By Asianet TamilFirst Published Feb 19, 2021, 9:35 PM IST
Highlights

2ஜி வழக்கின் மேல்முறையீடு வழக்கில் தேர்தலுக்கு முன்பே ஆ.ராசாவும் கனிமொழியும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஊழலுக்காக உலக அளவில் விருது வாங்கியவர்கள் திமுகவினர். இந்தியாவிலேயே ஊழலுக்காக 1976-இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். தமிழகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் திமுகவினர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள். 2ஜியில் 1.76 லட்சம் கோடி என்று கேட்டதுமே நாட்டு மக்களுக்கு மயக்கமே வந்தது.


 2ஜி வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் இடைக்காலமாக நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது. இந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கில் தேர்தலுக்கு முன்பே ஆ.ராசாவும் கனிமொழியும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். தேர்தல் நேரத்தில் இதை நாங்கள் சொல்வோம் என்பதற்காக தந்திரமாக முந்திக் கொள்கிறார்கள். ஊழல் என்று சொன்னாலே மக்களுக்கு திமுக நினைவுதான் வரும். ஊழல் என்ற வார்த்தையை மு.க.ஸ்டாலின் விட்டு விட்டு பேசினால் அவருக்கு நல்லது.


அதிமுக கட்சியின் நிலைப்பாடு குறித்து சொல்ல ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுதல் குழு, உயர்மட்ட குழு என அதிமுகவில் இருக்கிறது.‌இதை பாஜக சொல்ல முடியாது. பா.ஜ.கவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கூட்டணி வேறு; கொள்கை வேறு.  திமுகவின் நிலைப்பாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பேசி வருகின்றன. தொடர்ந்து அவர்கள் பேசினால் திமுகவின் நிலை போன்று கம்யூனிஸ்டு இயக்கங்கள் தாழ்ந்து போய்விடும்” என்று தெரிவித்தார்.

click me!