சசிகலா அதிமுகவில் இணைப்பா..? அமமுக அதிமுக கூட்டணிக்கு வருமா..? பாஜக மேலிட பொறுப்பாளர் அதிரடி விளக்கம்..!

By Asianet TamilFirst Published Feb 19, 2021, 9:02 PM IST
Highlights

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் விஷயம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதில் நாங்கள் அதிமுக பக்கமே உள்ளோம். அமமுகவை கூட்டணியில் சேர்ப்பது அதிமுக கையில்தான் உள்ளது தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி. தெரிவித்துள்ளார்.
 

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பல நல்ல திட்டங்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் கட்சிதான் அனுமதி மறுத்தது. ஆனால், ஜல்லிக்கட்டை கொடுத்தது பாஜக. இதிலிருந்து தமிழகத்துக்கு யார் நண்பன், யார் எதிரி எனத் தெரிந்துகொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர்களின் நண்பன். தமிழர்களின் நண்பன் பாஜக. காங்கிரஸும் திமுகவும் எதிரிகள்.


ஊழல், கடவுளை அவமதிப்பதுதான் திராவிட கலாசாரமா எனக் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், நிச்சயமாக இரட்டை இலக்கத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியே மிகப்பெரியது.


நாட்டில் பெட்ரோல் உற்பத்தி அதிகளவு இல்லை. அதனால்தான் அதன் விலை அதிகரிக்கிறது. 87 சதவீத எரிபொருள் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையை உலக சந்தைகளே தீர்மானிக்கின்றன. அதிமுகவை ஈபிஎஸ் - ஓபிஎஸ் வழிநடத்துகின்றனர். தற்போது சசிகலாவின் பலம் குறைவுதான். சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் விஷயம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதில் நாங்கள் அதிமுக பக்கமே உள்ளோம். அமமுகவை கூட்டணியில் சேர்ப்பதும் அதிமுக கையில்தான் உள்ளது” என சி.டி.ரவி. தெரிவித்தார்.

click me!