நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாத காலமே உள்ள நிலையில், அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணியில் எந்த, எந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய அளவில் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழக அளவிலும் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளும் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார். விழுப்புரத்தில் நடைப்பெற்ற புரட்சி பாரதம் கட்சியினுடைய மாநாட்டிலும், மதுரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியினுடைய மாநாட்டிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி தெளிவு படுத்தி விட்டார்.
புதிய கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு அழைப்பு
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை முடித்துள்ள நிலையில், வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதில் தற்போது உள்ள நிலை, அதை வேகப்படுத்துவது, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் நியமனம்,
மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் கட்சிகள், அதற்கான வியூகங்களை அமைப்பது, தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கிறது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்