
ஆக கடைசியில் பன்னீர்செல்வமும் அந்த அஸ்திரத்தை கையிலெடுத்துவிட்டார். எந்த அஸ்திரம்? தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல அவர் திட்டமிட்டிருப்பதுதான்!...
இந்திய அரசியல்வாதிகளை பொறுத்தவரையில் எப்போதும் வைபரேட் மோடிலேயே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். சில காலம் மியூட் பொசிஸனுக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியாது.
அரசியலரங்கில் தங்களது ரேட்டிங் சரிகிறது என்று நினைத்தால் உடனே ஒரு எமோஷனல் சீனை அரங்கேற்றி அதை சரி செய்து கொள்வார்கள். இப்படி இடைவெளியை நிரப்பும் ‘ஃபில்லர் டெக்னிக்குகள்’ நம் நாட்டு அரசியலில் நிறைய இருக்கின்றன. அதில் அரத பழையதாக இருந்தாலும் கூட அம்சமாக கை கொடுப்பதுதான் ‘பயணம்! அல்லது யாத்திரை!’ டெக்னிக்.
தனது செல்வாக்கு சரியும் போதெல்லாம் ‘ரத யாத்திரை’ நடத்துவது பா.ஜ.க.வின் டெக்னிக். பா.ஜ.க.வின் யாத்திரைகளெல்லாம் தெலுங்கு படம் போல் ச்சும்மா பரபரன்னு பட்டாசு கிளப்பும். அந்த யாத்திரைகளின் போது சிம்பிளாக கல்வீச்சில் ஆரம்பித்து செம சீரியஸாக பைப் வெடிகுண்டு வெடிப்பது வரை ஆக்ஷன் பிளாக்குகள் பல அல்லு கிளப்பும். இவையெல்லாம் நடந்துவிட்டால் யாத்திரை வெற்றி என்று அர்த்தம்.
காங்கிரஸும் யாத்திரை நடத்தும். ஆனால் அவை மலையாள படம் போல் ‘சென்டிமென்ட் சித்திரம்’ ஆகத்தான் இருக்கும். குடிசையிலிருக்கும் ஏழை வீட்டினுள் ராகுல்காந்து குனிஞ்சு போயி குத்த வெச்சு ஒக்காந்து கூழ் குடிக்கிறது, வேப்ப மர நிழல்ல கட்டில போட்டு விவசாயிங்க கூட ‘ஏக் காங்வ் மேம் ஏக் கிஷான் ரஹதாத்தா’ என்று பஞ்சாயத் ராஜ் வசனம் பேசுவது என்று மொண்ணையாக மொக்கையை போடுவார்கள்.
நாலு நாட்கள் நடக்கும் இந்த சீன்கள் நாடெங்கும் நாற்பது பேப்பர்களில் வந்துவிட்டாலே போதும் ராகுல் பையன் செம குஷியாகிடுவார்.
தமிழக அரசியல்வாதிகளும் இந்த ‘பயணம்’ வண்டியை நாலு டயர்களும் பஞ்சராகுமளவுக்கு ஓட்டித் தள்ளி தெறி கிளப்பாமல் அடங்கமாட்டார்கள். இது இன்னைக்கு நேத்தைக்கு இல்லை! தலைவர் கலைஞர் அந்த காலத்திலேயே இதை ஆரம்பித்துவிட்டார்.
அது எம்.ஜி.ஆர். ஆட்சியிலிருந்த நேரம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியலில் போடப்பட்ட வைரவேலை காணவில்லை. அறநிலையத்துறை அமைச்சராக ஆர்.எம்.வீரப்பன் (ஆங்! அதே சத்யாமூவிஸ் ஓனர்தான்) இருந்தார்.
இந்த களவு மட்டுமல்ல ஒரு சர்ச்சை மரணமும் நிகழ்ந்துவிட்டது. இது தொடர்பான விசாரணை கமிஷனின் அறிக்கை ஊருக்கு முன்னேயே கலைஞரின் கைகளுக்கு கிடைத்துவிட்டது. விடுவாரா தலைவர்? கட்சியில் கணக்கு கேட்டு வெளியேறி புதிய இயக்கம் தொடங்கி ஆட்சியை பிடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சிக்கு எதிராக தொடங்கினார் பாருங்கள் ஒரு ‘நீதி கேட்டு நடை பயணம்.’ மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை தலைவர் நடக்க கூடவே தமிழகமே நடந்தது போல் செம்ம பரபரப்பு.
இன்றைக்கு போல் மூவாயிரத்து முன்னூற்று நாலே கால் சேனல்கள் இல்லாத நிலையிலும், எவனும் லைவ் போடாத சூழலிலும், வாட்ஸ் அப் வஸ்துக்கள் இல்லாத அந்த காலத்திலும் பரபரப்பு பின்னி எடுத்தது. (அந்த நடை பயணத்தில் கலைஞரால் தாறுமாறாக விமர்சிக்கப்பட்ட அதே ஆர்.எம்.வீ. பிற்காலத்தில் கலைஞரின் ஆஸ்தான நண்பராகி நகமும் சதையுமாக பின்னிய கதைகள் இந்த சமயத்தில் உங்கள் நினைவுக்கு வந்து தொலைந்தால்! அதற்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது.)
கருணாநிதி போல் பயணத்தில் பரபரப்பை கிளப்பாவிட்டாலும் ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக அதிர்வை கிளப்பியவர்கள் இருவர். ஈழ பிரச்னைக்காக பழ.நெடுமாறனும், மது விலக்கு வேண்டி நம்ம குமரி அனந்தனும்தான் அவர்கள்.
பயண அரசியல் பற்றி பேசும் போது நம்ம வைகோ பற்றி பேசாமல் விட்டால், அதற்கு ஒரு நீதி கேட்டு மனிதர் புழலுக்குள்ளேயே நடைபயணம் போக துவங்கிவிடுவார். யெஸ்! ம.தி.மு.க.வின் கழக மருத்துவ அணியை சேர்ந்த டாக்டர் யாராவது ‘தலைவரே கொஞ்சம் நடந்தீங்கன்னா நல்லது’ என்று சின்னதாய் ஒரு பிட்டை போட்டாலும் போதும், புயல் நடக்க ஆரம்பித்துவிடும்.
இதற்குத்தான் என்றில்லை பூரண மதுவிலக்கில் ஆரம்பித்து சகல விஷயங்களுக்கும் நடை பயணம் அறிவிப்பதில் அண்ணன் கோபாலசாமிக்கு நிகர் அவரே! ஏதோ ஏதென்ஸ் நகரத்து வீதிகளில் கிரேக்க மன்னன் நிலமதிர நடப்பது போல் நம்மவர் நடப்பதை பார்க்க வேண்டுமே, அழகுடா. இந்த நடைபயணங்களின் போது வீதிக்கு வீதி நின்று ரோமாபுரி தேசத்து கதைகளை அவர் மண்டை காயும் வெயில் பிளந்து கட்டும்போது, பக்கத்தில் நிற்கும் மல்யுத்த ஹீரோ மல்லை சத்யாவுக்கே கண்ணை கட்டிக் கொண்டு மயக்கம் வருமென்றால் மற்றவர்களின் நிலை. அய்யகோ!...
நம்ம கேப்டன் கூட மதுரையில் தே.மு.தி.க.வை ஆரம்பித்த பின் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஒரு அரசியல் பயணத்தை துவக்கினாரே. ஆம்புலன்ஸுக்கு கூட வழிகொடுக்காமல் அவரது அடிப்பொடிகள் நூறு வாகனங்களில் பின்னால் அணிவகுத்து நிற்க அவர் வேனிலிருந்து ‘மக்கழே! நான் அந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போலில்லாமல் மாற்று அரசியல் செய்வேன்.’ என்று சீன் போட்டபோது கடுப்பில் காய்ந்தனர் ஈரோட்டு மக்கள்.
ஆக்சுவலி ‘பயணம்’ செல்வது அரசியலில் அரதபழைய டெக்னிக்தான். ஆனால் அதில் லேட்டஸ்ட் டெக்னாலஜியை புகுத்தி, ஹைடெக்காக பின்னிப் பேர்த்தெடுத்த மனிதர் நம்ம தளபதி.
நமக்கு நாமேவை அவர் கன்னியாகுமரியில் ஆரம்பித்த முதல் நாளே வைபரேஷன் வானத்தை தொட்டது. நடை பயணம் என்று அறிவித்துவிட்டு சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ, டெம்போ டிராவலர், பஸ், மின்சார ரயில் என்று எல்லா போக்குவரத்து சாதனங்களிலும் பயணித்து அவர் பொறி கிளப்பிய நாட்கள் 2016 தேர்தல் வெடிகுண்டுக்கு திரிகிள்ளப்பட்ட தினங்களே!
‘இவருக்கு யாருய்யா காஸ்ட்யூம் டிஸைனர்?’ என்று உதயநிதி ஸ்டாலினே காதில் புகைவிடுமளவுக்கு கலர்ஃபுல் அரசியல்வாதியாக ரகளை கிளப்பினார் தளபதி.
லைவ் ரிலே சாதனங்கள் முன்னும் பின்னும் சைடும் டாப்புமாய் கவர் செய்து கொண்டே இருக்க...அறுவடைக்கு தயாரான நெல் வயலில் நாற்றை நடுவது, அரை கிளாஸ் டீயை அரை மணி நேரம் குடிப்பது, செல்பி எடுக்க வந்த பொண்ணுங்களுக்கு பளீர் புன்னகை கொடுப்பது, அனுமதி கேட்காமல் மொபைலை நீட்டிய ஆட்டோ டிரைவருக்கு பொளேர் அடி வைத்தது, அழாத குழந்தையை தூக்கி தாலாட்டி வீலென்று கத்த வைத்தது என்று இவர் போட்ட சீன்களெல்லாம் திருவாரூர் கல்வெட்டில் திகட்ட திகட்ட செதுக்கப்பட வேண்டிய காட்சிகள். மொத்தத்தில் தட்டி எறிந்தார் தளபதி.
ஆக நம் நாட்டு அரசியலில் ‘பயணத்தின்’ பழைய ஹிஸ்டரி இப்படியிருக்க புதுசாய் நீங்க என்ன பண்ணப்போறீங்க மிஸ்டர். பன்னீர்?!