தென்மாவட்டங்களில் 80 தொகுதிகள்... அதிமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்த ஓ.பி.எஸ்..!

By Thiraviaraj RMFirst Published Nov 6, 2020, 6:26 PM IST
Highlights

இந்த மூன்றையும் வைத்தே வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிமுகவை அதிக தொகுதிகளில் வெற்றி வாகை சூட வைக்க அவர் வியூகம் அமைத்துள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் மார்தட்டுகிறார்கள். 

பணிவும், பவ்யமும், விசுவாசமும் தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மூன்றையும் வைத்தே வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிமுகவை அதிக தொகுதிகளில் வெற்றி வாகை சூட வைக்க அவர் வியூகம் அமைத்துள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் மார்தட்டுகிறார்கள். 

ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு குழுவில் எடப்பாடி 6 பேர் உள்ளனர். துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 5 பேர் உள்ளனர். அவர்களில், ஜே.சி.டி. பிரபாகர் கிறிஸ்தவ வன்னியர், மனோஜ் பாண்டியன், நாடார், சைவ பிள்ளை இனத்தை சேர்ந்த பா.மோகன், யாதவர் வகுப்பை சேர்ந்த கோபால கிருஷ்ணன், தேவேந்திர குலத்தை சேர்ந்த சோழவந்தன் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோரை வழி காட்டுதல் குழுவில் இணைத்துள்ளார். அனைத்து சமுதாயத்தினரையும் தோழமை காட்டி அரவணைத்து செல்லும் விதமாக ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை வழிகாட்டுதல் குழுவில் இணைத்து இருப்பதாக கூறுகிறார்கள்.

தென் மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் ஒவ்வொரு வகுப்பை சார்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனது ஆதரவாளர்களுக்கு வழிகாட்டுதல் குழுவில் இடம் அளித்துள்ளார். அதுவே தனது செல்வாக்கையும், அதிமுக வாக்கு வங்கியை தக்கவைக்கவும் ஓ.பி.எஸ் எடுத்த முக்கிய வியூகம்தான். இதன் மூலம் ஓ.பி.எஸின் தொலை நோக்கு பார்வையை உணரலாம்.

 

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உள்ள தனது ஆதரவாளர்கள் சார்ந்த சமுதாயத்தை சார்ந்தவர்களின் வாக்குகளை அள்ளினாலே அதிமுக வெற்றியை யாராலும் அசைக்க முடியாது’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் விசுவாசிகள் அதிகம். தான் கடந்து வந்த பாதையையும், விசுவாசத்தையும் எப்போதும் மறவாதவர் என்பதற்கு சான்றாக ஓ.பி.எஸ் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். 

அதற்கு ஒது ஒரு சிறந்த உதராணம் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., மாணிக்கத்திற்கு வாய்ப்பளித்தது. 2011 தேர்தலுக்கு முன் தி.மு.க., ஆட்சி இருந்தது. அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, மதுரையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்த இடம் தேர்வு செய்ய, பன்னீர்செல்வம் மதுரையில் முகாமிட்டிருந்தார். அப்போது தென்மாவட்டங்களில் மு.க.அழகிரியின் அராஜாகம் படுபயங்கரமாக இருந்தது. ஆளுங்கட்சியாக இருந்த திமுகவின் மிரட்டலுக்கு பயந்து, யாருமே இடம் தரமுன்வரவில்லை. 

அப்போது மாணிக்கம், தனக்கு சொந்தமான பாண்டி கோவில் ரிங் ரோடு பக்கத்தில் இருந்த நிலத்தை, ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுக்க முன் வந்தார். ஆட்சி மாற்றத்துக்கே அந்த கூட்டம்தான் காரணமாக இருந்தது. சோழவந்தான் தொகுதிக்கு சீட் கேட்டு ஒருவர் டி.டி.வி.தினகரன் மாமியார் மூலமாக காய் நகர்த்தினார். ஆனால், மாணிக்கத்தை அழைத்துச் சென்ற ஓ.பி.எஸ் ஜெயலலிதாவிடம் சீட் வாங்கிக் கொடுத்து சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற வைத்தார். 

அதை மனதில் வைத்தே இப்போதும் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மாணிக்கத்துக்கு, பன்னீர்செல்வம் இடம் வாங்கி கொடுத்திருக்கிறார். பழசை மறக்காதவர் ஓ.பி.எஸ் என இந்த விவரத்தை அறிந்தவர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படி விசுவாசமுள்ளவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளிக்க ஓ.பி.எஸ் முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். செல்வாக்கு மிக்கவர்களை அருகில் வைத்து இருப்பதை விட விசுவாசிகளுக்கு வாய்ப்பளித்தால் ஆபத்தின்றி நம்பி பயணிக்கலாம் என்பதில் ஓ.பி.எஸ் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

 

அதேபோல இனி ஒவ்வொரு பகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளையும் தீர்த்து வைக்கவும் உறுதி பூண்டுள்ளார். எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்கிற பட்டியல் எடுக்க உத்தரவிட்டு இருக்கிறார் ஓ.பி.எஸ் என்கிறார்கள். உதாரணமாக, தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது மேலப்பரவு கிராமம். இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியின் குறுக்கே மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான குரங்கணி, கொட்டகுடி ஆறு செல்வதால் மழைக் காலங்களிலும், பருவ மழை காலங்களிலும், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களும், விவசாயிகளும் தங்களது விளை பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பஸ்திரீகள் ஆற்றை கடக்க முடியாமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

அவர்கள் வசித்து வரும் வீடுகளும் மிகுந்த சேதமாகி உள்ளதாக தெரிவித்தனர். இன்று காலை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று  அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். பின்னர், உடனடியாக 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் சாலை வசதிகள் இல்லாமல் பழுதடைந்ததால் சாலைகள் அமைக்கவும் அப்பகுதி மக்கள் ஏற்கெனவே  கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அப்பகுதியில் சாலை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியையும் பார்வையிட்ட தமிழக துணை முதல்வர், ஓ.பி.எஸ் உடனடியாக சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தங்களது நீண்ட நாள் கோரிக்கை தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மூலமாக நிறைவேறியதை எண்ணி மலை கிராம பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்தக் கிராமத்திற்கு சுதந்திரத்துக்கு முன்னும், அதற்கு பின்னும் யாரும் எந்த வித உதவிகளையும் செய்ததில்லை. ஓ.பி.எஸ் அந்த வசதிகளை செய்து கொடுக்க முன் வந்துள்ளதால் ஆனந்தக் கண்ணீரில் மிதக்கின்றனர் அந்த கிராம மக்கள். இப்படிப்பட்ட பகுதிகளுக்கு உதவ முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.  ஆக, மக்கள் பணி, விசுவாசமானவர்களுக்கு வாய்ப்பு என்கிற ஆயுதங்களை கொண்டு தென்மாவட்டங்களில் அதிமுகவை வெல்ல வைக்க வியூகம் அமைத்து வருகிறார். இதன் மூலம் தென் மாவட்டங்களில் 80 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறிக்க ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார்’’என்கிறார்கள்.  



 

click me!