எட்டு வழிச்சாலை பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகிறது !! பாமகவை கிழித்து தொங்கவிட்ட பாலகிருஷ்ணன் !!

By Selvanayagam PFirst Published Jun 7, 2019, 9:13 PM IST
Highlights

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை பிரச்சனையில் பாமகவின் ராமதாசும், அன்புமணி ராமதாசும் சேர்ந்து இரட்டை வேடம் போடுகிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

தஞ்சை அடுத்த செங்கிப்பட்டியில்  சிபிஎம் மாநில செயலாளர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வருகிற 12-ந் தேதி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பங்குபெறும் என தெரிவித்தார்..

வருகிற 12-ம் தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை என  தமிழக அரசு அறிவித்திருப்பது  விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புறம் மட்டுமின்ற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. ஆங்காங்கே குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இந்த அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு போர்க் கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.. 

மத்திய மாநில அரசு இணைந்து மும்மொழி திட்டத்தை தமிழகத்தில் பின்வாசல் வழியாக திணிக்க முயற்சித்து வருகிறது. நீட் தேர்வினால் இந்த ஆண்டும் சில மாணவிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த பிறகும் தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்த தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. நல்ல வேளையாக உச்சநீதி மன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் எதற்காக? யாருக்காக? இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார்? என தெரியவில்லை என கூறினார்.

இப்பிரச்சனையில் பா.ம.க.வும் இரட்டை வேடம் போடுகிறது என்றும், விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ம.க. இருக்கும் என்றால் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணியில் இருந்து இந்நேரம் வெளியேறி இருக்க வேண்டும். 

அன்புமணி ராமதாசுக்கு மாநிலங்களவை  சீட் பெறுவதற்காக பா.ம.க. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் ஒட்டி கொண்டுள்ளது. இது சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு பா.ம.க. செய்யும் துரோகமாகும் என பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்..

click me!