7 பேர் விடுதலை விவகாரம்! காங்கிரஸ் - தி.மு.க உறவுக்கு ஆபத்து!

By Selvanayagam PFirst Published Sep 11, 2018, 9:42 PM IST
Highlights

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி தி.மு.க மேலிட தலைவர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறன்று கூடிய தமிழக அமைச்சரவை கூட்டம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்தது

இதன் அடிப்படையில் ஆளுநர் எந்த முடிவெடுப்பார் என்று தமிழகமே காத்திருக்கிறது. ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஆளுநர் தமிழக அரசின் பரிந்துரையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஏழு பேர் விடுதலைக்கு எதிராக கருத்து தெரிவித்தார். கொலை குற்றவாளிகளான ஏழு பேரையும் விடுவிப்பது தவறான முன் உதாரணம் என்றும் திருநாவுக்கரசர் கூறியிருந்தார்.

ஏழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்துமே ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

அதிலும் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக கருத்து சொல்லியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் வைத்து திருநாவுக்கரசர் இப்படி பேசியதை தி.மு.க மேலிட தலைவர்கள் விரும்பவில்லை.

ஏழு பேர் விடுதலைக்கு எதிராக அண்ணா அறிவாலயத்தில் வைத்து திருநாவுக்கரசர் பேசியது குறித்து மறுநாள் ஸ்டாலினிடம் தி.மு.க நிர்வாகிகள் சிலர் புகாராகவே அளித்துள்ளனர். அதற்கு ஏழு பேர் விடுதலையை எதிர்க்கப்போவதில்லை என்று ராகுல் காந்தியே கூறிவிட்ட நிலையில் எதற்காக திருநாவுக்கரசர் இவ்வாறு பேசி வருகிறார் என்று ஸ்டாலினும் வருத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தினால் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று சிலர் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றன

click me!