ஜெய் ஸ்ரீராம் சொல்றவங்க எல்லோரும் குற்றவாளிகள் இல்லை !! போட்டிக்கு லெட்டர் எழுதிய 61 பிரபலங்கள் !!

By Selvanayagam PFirst Published Jul 26, 2019, 10:49 PM IST
Highlights

ஜெய்ஸ்ரீராம் எனும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லையென கங்கனா ரனாவத், பிரசூன் ஜோஷி பென் உள்ளிட்ட 61 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருக்கும் கலைஞர்களில் 49 பேர், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினர். கும்பல் வன்முறைக்கு எதிராகவும், ‘ஜெய் ஸ்ரீராம்' என்கிற கோஷம் வன்முறைக்குப்  பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியும் அந்த கடிதம் எழுதப்பட்டது. 

அதில், ஜெய் ஸ்ரீராம் என்பதை முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபர்னா சென், ராம்சந்திர குஹா, அனுராக் காஷ்யப், அனுராதா கபூர் மற்றும் சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 49 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அதில், கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும் போதாது என்றும், சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பெரும்பாலான மக்கள் போற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தைப் ஆயுதமாக்கி போர் முழக்கமாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், அதற்குப் போட்டியாக, 62 கலைஞர்கள் பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியுள்ளனர். அதில், பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரானவத், சினிமா தயாரிப்பாளர் விவேக் அக்னிகோத்தாரி, பல்லவி ஜோஷி, எழுத்தாளர் பிரசூன் ஜோஷி, பாரம்பரிய நடனக் கலைஞரும், எம்பி-யும் ஆன சோனால் மான்சிங் உள்ளிட்ட 62 பேர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

அந்த கடிதத்தில், “கடந்த ஜூலை 23 ஆம் தேதி பிரமருக்கு எழுதிய கடிதம் ஒன்று எங்களை கோபம் கொள்ளச் செய்தது. 49 பேர் எழுதிய அந்த கடிதத்தில், அரசியல் சார்பும் தனிப்பட்ட முறையிலான நோக்கமும் இருந்தன. 

இது பிரதமர் நரேந்திர மோடியை எதிர்மறையாக சித்தரிக்கும் என்று நினைக்கிறோம். இன்று கடிதம் எழுதுபவர்கள் முன்னர் நக்சல் அமைப்பினரும், பழங்குடியினரும் விளிம்புநிலை மனிதர்களைத் தாக்கியபோதும் அமைதியாக இருந்தனர். பிரிவினைவாதிகள் காஷ்மீரில் பள்ளிகளை கொளுத்தும்போது அவர்கள் அமைதியாக இருந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், ஜெய் ஸ்ரீராம் எனும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகளாவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த பக்தர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் அவர்கள் மீது தவறான தோற்றத்தை உண்டாக்குகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்தும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுபோன்ற மேலும் பல வன்முறைகளை ஜெய் ஸ்ரீராம் பக்தர்கள் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

click me!