தமிழ் தேர்வை எழுதாத 50,000 மாணவர்கள்! இது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு தலை குனிவு!வேதனையில் விஜயகாந்த்

By vinoth kumar  |  First Published Mar 14, 2023, 3:42 PM IST

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49 ஆயிரத்து 599 மாணவர்கள் தமிழ் மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


தமிழ் மொழி பொதுத்தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49 ஆயிரத்து 599 மாணவர்கள் தமிழ் மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Latest Videos

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியும். ஆனால் தமிழ் மொழி தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்தது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. பொதுத் தேர்வை இத்தனை ஆயிரம் மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து அதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.

கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களால் கல்வியில் தமிழகம் முதன்மை இடத்தில் இருந்த நிலையில், தற்போது கல்வியின் தரம் குறைந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை தருகிறது. தமிழ் மொழி நம் தாய் மொழியாக இருக்கும் நிலையில், தமிழ் மொழி தேர்வை எழுத இத்தனை ஆயிரம் மாணவர்கள் வராதது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. தமிழ் மொழியின் அவசியத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடா - தமிழகமா என்று விவாதிப்பவர்கள் தமிழ் மொழியின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

தமிழ் மொழி தேர்வை மாணவர்கள் எழுதாதது குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண வேண்டும். இனி வரும் காலங்களில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு தலை குனிவு. தேர்தலின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருவது போல், தேர்வுகள் மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது என விஜயகாந்த் கூறியுள்ளார். 

click me!