Toll Gate: பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. விரைவில் 5 சுங்கச்சாவடிகள் அகற்றம்.. எவையவை தெரியுமா?

By vinoth kumarFirst Published Mar 17, 2022, 12:06 PM IST
Highlights

தமிழ்நாட்டில் மத்திய அரசின் சாலை திட்டம் பணிகளுக்கு கடந்த அதிமுக ஆட்சி ஒத்துழைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒப்பந்தாரர்களை அழைத்து அவர்களது குறைகளை கேட்டறிந்தோம். உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஒப்பந்ததார்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பரனூர் உள்பட நகராட்சி, மாநகராட்சி பகுதியில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், 8 வழிச்சாலைகளை நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். 

டெல்லியில் சந்திப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் அடங்கிய கோரிக்கை பட்டியலை அளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு;- தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுப்படுத்தவும், 8 வழிச்சாலையாக மாற்றப்பட்டு வரும் சென்னை - செங்கல்பட்டு சாலையை திண்டிவனம் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

உயர்மட்ட சாலைகள் அமைக்க கோரிக்கை

மாதவரம் சந்திப்பு சென்னை வெளிவட்டச்சாலையை 6 வழிச்சாலையாக்க வேண்டும். கோவை - சத்தியமங்கலம் சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். திருச்சி -துவாக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும், தாம்பரம் -செங்கல்பட்டு இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும், திருச்சி மற்றும் கோவை நகர்களில் அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார் என எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழ்நாட்டில் மத்திய அரசின் சாலை திட்டம் பணிகளுக்கு கடந்த அதிமுக ஆட்சி ஒத்துழைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒப்பந்தாரர்களை அழைத்து அவர்களது குறைகளை கேட்டறிந்தோம். உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஒப்பந்ததார்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 

5 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரிக்கை

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பரனூர், சென்னசமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

click me!