எடப்பாடி தனி மாவட்டம்..? அதிரடி அறிவிப்பை வெளியிடவிருக்கும் முதல்வர்..!

By Manikandan S R SFirst Published Jan 7, 2020, 10:35 AM IST
Highlights

தமிழகத்தில் மேலும் 3 புதிய மாவட்டங்கள் உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் பரப்பளவில் பெரியதாக இருந்த  மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு அண்மையில் 5 புதிய மாவட்டங்களை உருவாகியிருந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தலைமையில் தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக்கப்பட்டது. புதிய மாவட்டங்களுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் அந்தந்த மாவட்ட விழாக்களில் நேரில் சென்று கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. சேலம் மாவட்டத்தை பிரித்து எடப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல கோவையில் இருந்து பொள்ளாச்சியும், நாகையில் இருந்து மயிலாடுதுறையும் பிரிக்கப்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிக்கப்பட கூடும் என தகவல்கள் வருகிறது. தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 3 புதிய மாவட்டங்கள் உருவாகினால் தமிழகத்தின் மாவட்டங்கள் எண்ணிக்கை 40தாக உயரும்.

click me!