
ஆவினில் வேலை வாங்கி கொடுப்பதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குளில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவானார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 நபர்களின் நம்பர்களை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவை கேரளா, கொடைக்கானல், கோவைக்கு விரைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜி பெங்களுருவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு ஏற்கனவே ஒரு தனிப்படை முகாமிட்டுள்ளது. மதுரை, சென்னையிலும் தனிப்படையினர் முகாமிட்டுள்ள நிலையில், கொடைக்கானல், கோவை, கேரளாவுக்கு தனிப்படை காவலர்கள் விரைந்தனர். இதன் மூலம் மோசடி புகாரில், தலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க இதுவரை 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜேந்திர பாலாஜியுடன் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.