சென்னை மாநகராட்சியில் 28 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்..!! ஆன்டிபாடி பரிசோதனையில் அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2020, 5:04 PM IST
Highlights

இது நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் சோதனை, எனவே குறைந்த நேரத்தில் அதாவது 15 நிமிடத்திற்குள் ஒருவருக்கு நோய் தொற்று உள்ளதா என கண்டறிய முடியும்.

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 564 நபர்களுக்கு ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 28 நபர்களுக்கு தொற்று இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து முழு விவரம். பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை இடத்தில் பணிபுரியும் 564 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதேநேரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி கொரோனா கண்டறியும் சோதனைகள்  சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேல் எடுக்கப்படுகின்றது. 

தொற்று உள்ளவர்களை கண்டறிதல் 12,000 களப்பணியாளர்களைக் கொண்டு வீடுகள்தோறும் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கணக்கெடுப்பு செய்தல், காய்ச்சல் மருத்துவ முகாம்கள் மூலம் நோயாளிகளை கண்டறிதல், அவர்களுடைய தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது மேலும் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய, இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் ஐ.சி.எம்.ஆர் இன் வழிகாட்டுதலின்படி ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என கண்டறியும் பரிசோதனையான ஆன்ட்டிபாடி டெஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் சோதனை, எனவே குறைந்த நேரத்தில் அதாவது 15 நிமிடத்திற்குள் ஒருவருக்கு நோய் தொற்று உள்ளதா என கண்டறிய முடியும். 

முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முதல்நிலை பணியாளர்களுக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும், அதன்படி 16-7-2020 அன்று மாநகராட்சி தலைமையிடத்தில் பணிபுரியும் 524 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 452 நபர்களுக்கு எந்த தொற்றும் இல்லை எனவும். 84 நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய்த்தொற்று வர வாய்ப்பில்லை எனவும், அதில் 28 நபர்களுக்கு தொற்று  இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த 28 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியும்  RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

click me!