எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வரி ரூ.26,51,919 கோடி.. குடும்பத்திடம் ரூ.1 லட்சம் வசூல்.. ப.சி. அம்பலம்!

By Asianet TamilFirst Published Apr 4, 2022, 11:27 AM IST
Highlights

நாட்டில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் சராசரியாக எரிபொருள் வரியாக அரசு ரூ.1 லட்சத்தை வசூலித்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் சராசரியாக எரிபொருள் வரியாக மத்திய அரசு ரூ.1 லட்சத்தை வசூலித்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

உயரும் பெட்ரோல், டீசல் விலை

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்தன. சுமார் 4 மாதங்களுக்கு இதன் விலை ஏறாமல் பார்த்துக்கொண்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கிவிட்டன. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை சராசரியாக 7 ரூபாய்க்கும் அதிகமாக உயந்துவிட்டன. இதேபோல காஸ் சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை எட்டிவிட்டது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் விலைவாசியும் உயரத் தொடங்கிவிட்டன. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

 நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைய உயர்வுப் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.  “முந்தைய காங்கிரஸ் அரசு பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் வினியோகிக்கப்பட்டன. 2026-ம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் மீது மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதை நிர்மலா சீதாராமன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ப. சிதம்பரம் கணக்கு

இதற்கிடையே 2014-இல் மோடி அரசு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மக்களிடமிருந்து வசூலித்த தொகை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்ரம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய பாஜ அரசு கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக ரூ.26,51,919 லட்சம் கோடியை வசூலித்துள்ளது. நாட்டில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் சராசரியாக எரிபொருள் வரியாக அரசு ரூ.1 லட்சத்தை வசூலித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக, மத்திய அரசு என்ன செய்தது? இதை ஒவ்வொரு குடும்பத்தினரும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

click me!