ஓபிஎஸ் துறையில் 2,500 கோடி ரூபாய் வீண்... தேனியில் பகீர் கிளப்பிய தமிழக அமைச்சர்..!

By manimegalai aFirst Published Jul 22, 2021, 9:50 PM IST
Highlights

ஒரு சில ஒப்பந்ததாரர்கள் பயன் பெறுவதற்காகவே குடிசை மாற்று வாரியத்தில் 2,500 கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது என்று தமிழக வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
 

தேனியில் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “குடிசை மாற்று வாரிய துறையின் சார்பில் தேனி, மதுரை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்திருக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் கீழ் இயங்கிய இந்தக் குடிசை மாற்று வாரிய துறை சார்பில் தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் 35 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இடமாற்றம் செய்த பிறகு இந்த வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், இதுவரை மக்களை அங்கு குடியேற்றம் செய்யவே இல்லை. கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
எனவே, வீடில்லாத, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை தேர்வு செய்து அந்த வீடுகளில் குடியமர்த்த திட்டமிட்டிருக்கிறோம். இதேபோல தமிழகம் முழுக்க பயன்படுத்தாத நிலையில் உள்ள வீடுகளைப் புதுப்பித்து மீண்டும் வீட்டின் உரிமையாளர்களுக்கே வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆட்சியில் இது போன்ற பணிகளில் கவனம் செலுத்தவில்லை. ஒரு சில ஒப்பந்ததாரர்கள் பயன் பெறுவதற்காகவே குடிசை மாற்று வாரியத்தில் 2500 கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற இடங்களில் திட்டங்களை கொண்டு வந்த வகையில் இந்த இழப்பை வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஏற்படுத்தியிருக்கிறார். 
 சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தாமதம் செய்யும் வங்கிகள் குறித்தெல்லாம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வங்கி மேலாளர்களை அழைத்து பேசி விரைவுபடுத்த உள்ளோம். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்குவதில் சிக்கல்கள் இருந்தால், அரசின் கவனத்துக்கு உடனே கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் தொடங்க ஊக்குவித்து வருகிறோம்” என தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். 
 

click me!