Jayalalitha-வை கைது செய்து 25 ஆண்டுகள்.. அம்மாவுக்காக நான் அளித்த ஒத்த அறிக்கை.. பெருமூச்சுவிடும் மாஜி எம்.பி!

By Asianet TamilFirst Published Dec 7, 2021, 9:39 AM IST
Highlights

 திமுக அரசின் காவல்துறை அம்மாவை போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று கைது செய்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் அதை வரவேற்றனர். வைகோ, சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் அம்மாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றுகூட அறிக்கை விட்டனர்.


 நான் தந்த ஓர் அறிக்கை வரும் காலங்களில் எனது அரசியல் வாழ்க்கையை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று அன்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்று முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய பழைய நினைவுகளையும் அரசியல் வாழ்க்கை பற்றியும் அசைப்போடும் அதிமுக மாஜி எம்.பி.க்களில் மைத்ரேயனுக்கு தனி இடம் உண்டு. எந்த விஷயமாக இருந்தாலும் உடனே தன்னுடைய நிலையை ஃபேஸ்புக்கில் தெரிவித்துவிடுவார். அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு டிசம்பர் 7 அன்று நடந்த நிகழ்வு பற்றி பேஸ்புக்கில் எழுதியுள்ளார். அதில், “ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம் தேதி வரும். ஆனால் 1996, டிசம்பர் 7 ம் தேதியை என்னால் மறக்க முடியாது. 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கால் நூற்றாண்டு கடந்து விட்டது. ஆனால் அன்றைய நிகழ்வுகள் இன்றும் பசுமையாக இருக்கின்றன.  நான் எனது நினைவுகளை 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் செல்கிறேன். 

1996ம் ஆண்டு நான் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர். டிசம்பர் மாதம் 7ஆம் தேதி வழக்கம் போல் விடிந்தது. அனைவரும் அவரவர் வேலைகளில் இருந்தனர். திடீரென்று தொலைக்காட்சிகளில் ப்ரேக்கிங் நியூஸ். திமுக அரசின் காவல்துறை அம்மாவை போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று கைது செய்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் அதை வரவேற்றனர். வைகோ, சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் அம்மாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றுகூட அறிக்கை விட்டனர். அப்போது அம்மா கைதைக் கண்டித்து முதல் அறிக்கை கொடுத்தது நான்தான். அம்மாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டன அறிக்கை வெளியிட்டேன்.

அன்று இரவு தொலைக்காட்சி செய்திகளிலும்  8ஆம் தேதி நாளிதழ்களிலும் எனது கண்டன அறிக்கை முக்கிய செய்தியாக வந்தது. 7ஆம் தேதி இரவு பாஜக தேசியத் தலைவர் அத்வானியிடம் கூறினேன். அவரும் எனது அறிக்கை சரியானது என்று ஆமோதித்தார். 8ஆம் தேதி காலை சுலோசனா சம்பத் அம்மாவை சென்னை மத்திய சிறையில் சந்தித்த போது, அம்மா. "மைத்ரேயன் அறிக்கையை படித்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவரை சந்திக்கிறேன் "என்று என்னிடம் தெரிவிக்குமாறு சொன்னார். 
1996 டிசம்பர் மாதம் 7ஆம் தேதி நான் வெளியிட்ட அந்த ஒரு அறிக்கை வரும் காலங்களில் எனது அரசியல் வாழ்க்கையை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று அன்று நான் கனவிலும் நினைக்கவில்லை...” என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
 

click me!