கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க தினமும் 25 கோடியா.? உணவு, அதன் விலை மதிப்பு வெளியிட முத்தரசன் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2020, 10:38 AM IST
Highlights

நோய் தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவ மனையில் சிகைச்சை பெற்று வருபவர்களிடம் கேட்டறிந்த வகையில் முதலமைச்சரின் கணக்கின் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு ஆகும் செலவு குறித்து மதலமைச்சரின் தகவல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும், எனவே கொரோனா நோய் சிகைச்சை பெறுவோருக்கு, வழங்கப்படும் உணவு விபரங்கள், அதன் விலை மதிப்பு ஆகியவற்றை தெளிவாக பட்டியலிட்டு, பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும்  உணவு தயாரிக்க தினசரி ரூபாய் 25 கோடி வரை செலவாகிறது என முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவ மனையில் சிகைச்சை பெற்று வருபவர்களிடம் கேட்டறிந்த வகையில் முதலமைச்சரின் கணக்கின் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலையில் 2 இட்லி, ஒரு சிறிய ஊத்தப்பம், மதியம் காய்கறி கூட்டு, சிறிது சாம்பார், சிறுசிறு அப்பளம் ஆகியவை உள்ளடங்கிய அளவு சாதம், இரவு மீண்டும் 2 இட்லி, சிறிய உத்தப்பம் ஒன்று என வழங்கப்படுவதாக தெரிகிறது. 

வேறு சில பகுதிகளில் முட்டையும், பாலும் கூடுதலாக வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். இவை அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டாலும் முதலமைச்சரின் கணக்கு, பொருந்தாக் கணக்காகவே வருகிறது. கெரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகைச்சை நடவடிக்கையில் நிதித் தவறுகளும், ஊழலும்  நடைபெறுவதாக புகார்களும் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் கொரோனா நோய் சிகைச்சை பெறுவோருக்கு, வழங்கப்படும் உணவு விபரங்கள், அதன் விலை மதிப்பு ஆகியவற்றை தெளிவாக பட்டியலிட்டு, பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது. என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 

click me!