24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு.. வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமரா.. ரஜினியை கண்காணிக்கும் உளவுத்துறை..!

By Selva KathirFirst Published Dec 10, 2020, 11:36 AM IST
Highlights

இப்படி திடீரென ரஜினி வீட்டிற்கு பாதுகாப்பு சிசிடிவி கேமரா என தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தாலும் கூட ரஜினியை கண்காணிக்கும் ஒரு செயல் என்கிறார்கள். இதற்கு முன்பு வரை மு.க.ஸ்டாலின், கலைஞர், ராமதாஸ், விஜயகாந்த் போன்ற எதிர்கட்சித்தலைவர்களையும் இதே பாணியில் தமிழக போலீசார் கண்காணித்து வந்தனர். 

நடிகர் ரஜினி வீட்டின் முன்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தலைமையில் 15 போலீசாரை பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை நடிகர் ரஜினியை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கானோர் வருவதுண்டு. ஆனால் ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு காட்டப்பட்ட கெடுபிடி காரணமாக ரஜினியை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் ரஜினியும் கூட ரசிகர்களை தனது வீட்டிற்கு வருவதை ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்த பிறகு தினமும் அவரது வீட்டிற்கு ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ரஜினியை பார்க்கவில்லை என்றாலும் தாங்கள் வந்து சென்றதாக கூறுங்கள் என்று செக்யூரிட்டி ஆட்களிடம் விசிட்டிங் கார்டுகளை ரசிகர்கள் கொடுத்துச் செல்கின்றனர். அதோடு மட்டும் அல்லாமல் ரஜினியின் வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன் பகுதியில் ஏராளமானோர் அதிக அளவில் உலவிக் கொண்டிருக்கின்றனர். கேட்டால், தலைவரை பார்க்க வந்திருப்பதாக போலீசாரிடம் பதில அளித்து வந்தனர். மேலும் ரஜினியை தேடி வரும் ரசிகர்களை அவரது வீட்டின் காவலாளிகளால் கூட சமாளிக்க முடியவில்லை.

காலையில் இருந்து ரஜினி வீட்டு முன்பே காத்திருக்கும் ரசிகர்களை கலைந்து போகச் சொன்னால் காவலாளிகளுடன் அவர்கள் சண்டையிடுவதும் நடைபெற்றது. இதற்கிடையே ரசிகர்கள் என்கிற போர்வையில் வேறு யாரும் உள்ளே வந்துவிடக்கூடாது என்று ரஜினி தனது வீட்டிற்கு வரும் வழி முழுவதும் தனது சொந்த செலவில் சிசிடிவி கேமராக்களை அமைத்துள்ளார். இந்த நிலையில் தமிழக அரசும் ரஜினியின் வீட்டிற்கான பாதுகாப்புக்கு என்று உதவி ஆய்வாளர் ஒருவர் தலைமையில் 15 போலீசாரை அனுப்பி வைத்துள்ளது.

தற்போது ரஜினி வீட்டிற்கு 100 அடி தொலைவிற்கு பாரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இனி ரஜினியுடன் அப்பாய்ன்ட்மென்ட் பெற்றவர்கள் மட்டுமே அந்த பார்கார்டை தாண்டிச் செல்ல முடியும். மேலும் ரஜினி வீட்டிற்கு யார் வந்தாலும் போலீசாரிடம் தங்களை பற்றிய முழு விவரங்களையும் கொடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதே போல் ரஜினி செலவில் போயஸ்கார்டனில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டாலும் அதனை கட்டுப்படுத்தும் மற்றும் மேற்பார்வையிடும் உரிமை போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி திடீரென ரஜினி வீட்டிற்கு பாதுகாப்பு சிசிடிவி கேமரா என தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தாலும் கூட ரஜினியை கண்காணிக்கும் ஒரு செயல் என்கிறார்கள். இதற்கு முன்பு வரை மு.க.ஸ்டாலின், கலைஞர், ராமதாஸ், விஜயகாந்த் போன்ற எதிர்கட்சித்தலைவர்களையும் இதே பாணியில் தமிழக போலீசார் கண்காணித்து வந்தனர். தற்போது இந்த கண்காணிப்பு வளையத்திற்குள் ரஜினியையும் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் இனி ரஜினி வீட்டிற்கு யார் வந்தாலும் அது போலீசாருக்கு தெரியாமல் போகாது. இதனால் தான் நேற்று ரஜினி தனது ஆலோசனை கூட்டத்தை கூட வீட்டை தவிர்த்து கல்யாண மண்டபத்திற்கு மாற்றியதாக கூறுகிறார்கள். ரஜினி தினந்தோறும் அங்கு செல்லும் பட்சத்தில் அங்கு போலீஸ் பாதுகாப்பு நிரந்தரமாக்கப்பட வாய்ப்பு உள்ளது.

click me!