வெளிநாடுகளில் இருந்து வந்த 2390 பேருக்கு பரிசோதனை.. 5 பேருக்கு தொற்று உறுதி.. சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2020, 11:11 AM IST
Highlights

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வந்த நோயாளிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளிலிருந்து வந்த 5 கொரோனா நோயாளிகளும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் இன்று வரை வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்த  2390 பேருக்கு கொரோனா தொற்றுநொய் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் லண்டனில் இருந்து வந்த மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த தலா ஒருவர், தஞ்சையைச் சேர்ந்த இருவர் என நான்கு பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அதேபோல் சென்னையைச் சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வந்த நோயாளிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வித்தியாசமான அறிகுறிகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. அனைவருமே  மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் பொது மக்கள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நோய்த்தொற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நல்ல பயனை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை, இருந்தாலும் தடுப்பூசி வருகிறது என்பதற்காக அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று பொதுமக்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு நாளைக்கு 300 பேர் மட்டுமே நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் நோய்த்தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

click me!