21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா? வேண்டவே வேண்டாம்... தூதுவிடும் எடப்பாடி?

By vinoth kumarFirst Published Feb 10, 2019, 11:20 AM IST
Highlights

வருகிற மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தனது தூதுவர்கள் மூலம் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வருகிற மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தனது தூதுவர்கள் மூலம் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மீண்டும் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி எதிராக செயல்பட்டதால் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், நீதிமன்ற தீர்ப்பில் எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதிகள் கூறினர். இதைத் தவிர தற்போதைய எம்எல்ஏக்கள் 3 பேர் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த கருணாஸ் உள்ளிட்ட 3 பேரும் எதிராக உள்ளனர். இதனால் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக 110 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். எதிர்க்கட்சியில் திமுக கூட்டணியில் 97 எம்எல்ஏக்கள், டிடிவி மற்றும் ஆதரவு என 4 பேர், கூட்டணியைச் சேர்ந்த தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் என 104 பேர் உள்ளனர்.

 

தற்போது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில்தான் தமிழக மக்கள் உள்ளனர். அதில் 21 தொகுதியிலும் அதிமுக தோற்றால், எதிர்க்கட்சிகளின் பலம் 125ஆக உயர்ந்து விடும். ஆட்சி கவிழும். இதனால் இடைத்தேர்தல் நடத்தாமல் முடிந்தவரை ஆட்சியை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவு செய்தது.

இதற்காக பதவி இழந்த 18 எம்எல்ஏக்கள் நீதிமன்றம் செல்ல காலக்கெடு இருப்பதால் தேர்தல் நடத்தவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தினகரன் அணியினர் மேல்முறையீடு செய்வார்கள் என்று அதிமுகவினர் எதிர்பார்த்தனர். இதனால் அதிமுக ஆட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்ற நினைத்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மேல்முறையீடு செல்லாமல் தேர்தல் சந்திக்க தயார் என்று அதிரடியாக அறிவித்தனர்.  

தற்போது அந்த காலெக்கெடுவும் முடிந்து விட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த தயார் என்று அறிவித்துள்ளது. இதனால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி, தூதுவர்கள் மூலம் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இடைத்தேர்தல் நடத்தினால் ஆட்சி மாற்றம் உறுதி என்று கருதி அதிகாரிகள் நமக்கு மக்களவை தேர்தலில் ஒத்துழைக்க மாட்டர்கள். மக்களவை தேர்தலில் தோல்வி உறுதியாகிவிடும். நாம் கணிசமாக வெற்றி பெற வேண்டும் என்றால், இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி, கூறியதாக சொல்லப்படுகிறது. 

இதனால், மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறாது என்று அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி தமிழக அரசியல் நிலவரம் குறித்து எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இடைத்தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

click me!