2021 சட்டமன்ற தேர்தல்..! விஜயகாந்த் பிறந்த நாளில் கடையை திறந்து கூட்டணி வியாபாரத்தை துவங்கிய பிரேமலதா!

By Selva KathirFirst Published Aug 27, 2020, 5:13 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் ஆனால் சட்டமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாடு என்று டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிவிப்போம் என்று பிரேமலதா கூறியிருப்பது தேமுதிக கூட்டணிக்கான அனைத்து வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளதை காட்டுகிறது.

தமிழக அரசியலில் ஒரு கட்சியுடன் கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கும் போது மற்றொரு கட்சியுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெறுவது சாதாரணமான ஒன்று. உதாரணத்திற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக வெளிப்படையாக கூட்டணி பேசிக் கொண்டிருந்தது. அதே சமயம் திரைமறைவில் திமுக கொடுக்க முன்வந்த தொகுதிகள் குறித்தும் பாமக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஒரே நேரத்தில் வெளிப்படையாக இரண்டு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திய கட்சி என்றால் அது தேமுதிக தான்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவிற்கு வெறும் நான்கு தொகுதிகளை மட்டுமே தர முன்வந்தது அதிமுக. இதுகுறித்து சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள சொகுசு ஓட்டலில் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் திமுகவின் பொருளாளர் துரைமுருகனை தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ஆர்.இளங்கோவன்,அனகை முருகேசன் ஆகியோர் சந்தித்து கூட்டணி பேசினர். இந்த இரண்டு காட்சிகளிலும் நேரலையில் ஒளிபரப்பாகி தேமுதிகவை சந்தி சிரிக்க வைத்தது.

இதன் மூலம் தேமுதிக கட்சியின் தேர்தல் நிலைப்பாடும் கேள்விக்குறியானது. மேலும் தேமுதிக கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் பேரம் பேசுகிறது என்கிற பல ஆண்டு குற்றச்சாட்டும் உண்மையோ என்று யோசிக்கும் நிலை உருவானது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. வழக்கமாக தேமுதிக ஒரு கூட்டணியில் இருந்தால் தேர்தல் முடிந்த பிறகு அந்த கூட்டணியில் இருந்து விலகிவிடுவது வழக்கம். ஏனென்றால் அப்போது தான் அடுத்த தேர்தலில் தங்களை பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பார்கள், பேரம் பேசலாம் என்கிற வியூகம் என்று சொல்லப்படுவதுண்டு.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அதிமுக மாநிலங்களவை எம்பி பதவியை தங்களுக்கு வழங்கும் என்கிற நம்பிக்கை தான் என்கிறார்கள். ஆனால் தற்போது வரை தேமுதிகவிற்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இனி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தான் தமிழகத்தில் மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாகின்றன. எனவே சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதே சமயம் திமுக தனது கூட்டணிக்கு புதிய கட்சிகளை வரவேற்று வருகிறது. இதே போல் மூன்றாவது அணி அமைப்பதற்கான  முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தால் பாஜக தலைமையில்  ஒரு அணி உருவாக வாய்பபு உள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாக தேமுதிக கருதியிருக்கலாம். அதனால் தான் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும்
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை டிசம்பர் அல்லது ஜனவரியில் கேப்டன் அறிவிப்பார் என்று கூறியுள்ளார் பிரேமலதா.

இதன் மூலம் தேர்தல் நேரத்தில் நடைபெறும் கூட்டணி வியாபாரத்திற்கு நாங்கள் தயார் என்று பிரேமலதா கடையை திறந்து வைத்து உட்கார்ந்திருப்பது தெரியவருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் நடைபெற்றதை போல் இல்லாமல் சட்டமன்ற தேர்தலில் தர்மசங்கடங்கள் எதுவும் நிகழாமல் கூட்டணியை பேசி முடிக்க வேண்டும் என்பது தான் பிரேமலதாவின் தற்போதைய ஒரே இலக்கு என்கிறார்கள். அந்த வகையில் எந்த கட்சி அதிக தொகுதிகள் வழங்குகிறதோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்றெல்லாம் பிரேமலதா முடிவெடுக்கமாட்டாராம், அவருடைய எதிர்பார்ப்பு அதற்கும் மேல் தான் எப்போதும் இருக்கும் என்கிறார்கள்.
 

click me!