
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்-கின் ஹெலிகாப்டரில் வந்து போக வேண்டும் என்பதற்காக, 20 கிராமங்கள் 2 நாட்கள் இருளில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ளசாட்னா மாவட்டத்தில், தாக்கூர் ராம்நாத் சிங்கின் சிலை திறப்பு நிகழ்ச்சி, மே 20-ஆம் தேதி ஏற்பாடாகி இருந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ராஜ்நாத் சிங்கின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக, 19-ஆம் தேதி மாலையே- அந்தபகுதியில் செல்லும் உயர் மின்னழுந்த வயர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
19-ஆம் தேதி மாலை 4 மணிக்கு துண்டிக்கப் பட்ட இந்த மின்சாரம், விழா முடிந்து ராஜ்நாத் சிங் சென்றபின்பும் வரவில்லை. மின்சாரம் துண்டிக்கப் பட்டதால், சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரும் தவிப்புக்கும் அவஸ்தைக்கும் ஆளாகிவிட்டனர்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஆந்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை மின்வாரிய அலுவலகத்திற்கே சென்று அங்கிருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மீண்டும் மின்சாரம் வரும்வரை இடத்தைக் காலி செய்ய மாட்டோம் என்று கூறி விட்டனர். இதையடுத்து, நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், இன்று அதிகாலை 3 மணியளவில் 20 கிராமங்களுக்கும் மீண்டும் மின் இணைப்பை வழங்கினர்.