இருக்கையை விட்டு  எழுந்து வந்து மூதாட்டிக்கு ஆறுதல் சொன்ன முதலமைச்சர்!! மகனின் சாவுக்கு நீதி கிடைக்க உதவி செய்த முதல்வருக்கு நன்றி…

First Published Jul 27, 2018, 11:37 PM IST
Highlights
2 policemen sent to death sentence mothers thanks to cm


போலீஸ் காவலில் இளைஞர் மரணம் அடைந்த  வழக்கில் 2 காவலர்களுக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, தனது மகன் சாவுக்கு நீதி கிடைக்க உதவி செய்த கேரள முதலமைச்சருக்கு மூதாட்டி ஒருவர் நேரில் வந்து நன்றி தெரிவித்தார். கண்ணீர் சிந்தியபடி தன்னை சந்திக்க வந்த  மூதாட்டியை இருக்கையை விட்டு எழுந்து சென்று கரங்களைப் பற்றி பினராயி விஜயன் ஆறுதல் சொன்ன நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற  கூலி வேலை செய்து வந்த இளைஞரை கடந்த 2005-ம் ஆண்டு திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



ஓணம் பண்டிகையை யொட்டி  தனது முதலாளி கொடுத்த 4 ஆயிரம் ரூபாய் பணத்துடன்  புது துணி எடுக்கச் சென்ற உதயகுமாரை திருடன் என்று சந்தேகத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது இந்த கொடூரம்  நிகழ்ந்தது.

இதையடுத்து தனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்றுவிட்டதாக உதயகுமாரின் தாய் பிரபாவதி கேரள உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.



இந்த வழக்கில் கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றிய ஜிதக்குமார், ஸ்ரீகுமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிதாஸ், ஷாபு மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் சி.பி.ஐ.  நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கேட்க நீதிமன்றத்துக்கு வந்திருந்த பிரபாவதி வானத்தை நோக்கி கைகூப்பி வணங்கி கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரபாவதியும், அவரது இன்னொரு மகன் மோகனன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகத்திற்கு சென்று முதல்மைச்சர்  பினராய் விஜயனை சந்தித்தார்.

கூப்பிய கரங்களுடன் கண்ணீர் சிந்தியபடி தன்னை நோக்கி பிரபாவதி வருவதை பார்த்ததும் பினராய் விஜயன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரபாவதியின் கைகளை பிடித்தபடி அவருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த வழக்கில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுத்ததற்காக அவருக்கு நன்றி கூறினார். தனது மகன் உதயகுமார் கொலையுண்டபோது பினராய் விஜயன் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்ததையும், அப்போது அவர் தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததையும் பிரபாவதி அவரிடம் நினைவுபடுத்தினார்.

மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், இதில் தனக்கு அரசின் உதவி தேவை என்றும் பிரபாவதி கேட்டுக்கொண்டார். சட்ட உதவி உள்பட அனைத்து உதவிகளையும் மாநில அரசு கண்டிப்பாக செய்யும் என்று பினராய் விஜயன் அவரிடம் உறுதியளித்தார். இந்த நிகழ்வு கேரள மாநில தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியுல் ஆழ்த்தியது.

click me!