சுமூக பேச்சு வார்த்தையை அடுத்து ஸ்ட்ரைக் வாபஸ் !! நள்ளிரவு முதல் லாரிகள் ஓடும்!!

First Published Jul 27, 2018, 10:19 PM IST
Highlights
Lorry strike vapas and today midnight lorry will be operated


பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலை  நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் லாரிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு வார காலமாக லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. வெளிமாநிலங்களுக்கு இரும்பு, ராணுவ வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை ஏற்றி செல்லும் 7 ஆயிரம் ட்ரெய்லர் லாரிகளும், இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன.

லாரிகள் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டதால், மார்க்கெட்டுகளுக்கு வெளியூரில் இருந்து காய்கறி வருவதும் அடியோடு நின்றுவிட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. மேலும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் டிரெய்லர் லாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று அந்த சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  டெல்லியில் லாரி உரிமையாளர்களுடன் மத்திய சாலைபோக்குவரத்து செயலாளர் மாலிக் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.  இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் லாரிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!