18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு… தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலை 10.30 மணி…

By Selvanayagam PFirst Published Oct 25, 2018, 6:08 AM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படவுள்ளது. நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பை வாசிக்கிறார். தமிழக அரசியலில் பெரும பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தீர்ப்பு, பல மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை   சபாநாயகர் தனபால்  தகுதி நீக்கம் செய்தார்.. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார். 

அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை ஆகஸ்டு 31-ம் தேதி நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி. 

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சிக்கு பாதிப்பில்லை என எடப்பாடி தரப்பும், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் முதலமைச்சரை மாற்றுவோம் என தினகரன் தரப்பும் கூறி வருகிறது. இதையடுத்து அடுத்த சில நாட்களுக்கு தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது .

click me!