அதிமுகவிற்கு 140 தொகுதிகள்... கூட்டணிக்கு 94 தொகுதிகள்... எடப்பாடியார் இறுதி செய்த டீல்..!

By Selva KathirFirst Published Sep 7, 2020, 9:34 AM IST
Highlights

கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களை போல் அல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தல் தமிழக தேர்தல் களத்தை புதிய வகையில் தயார் செய்துள்ளது. கலைஞர், ஜெயலலிதா என்று இல்லாமல் இந்த முறை திமுகவா? அதிமுகவா? என்கிற கேள்வியோடு ரஜினி களம் இறங்கினால் என்ன ஆகும் என்கிற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியும் என்கிற இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களை போல் அல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தல் தமிழக தேர்தல் களத்தை புதிய வகையில் தயார் செய்துள்ளது. கலைஞர், ஜெயலலிதா என்று இல்லாமல் இந்த முறை திமுகவா? அதிமுகவா? என்கிற கேள்வியோடு ரஜினி களம் இறங்கினால் என்ன ஆகும் என்கிற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் அதிமுகவும் சரி திமுகவும் சரி தங்கள் தலைவர்களான ஜெயலலிதா, கலைஞர் தோளில் சவாரி செய்து கரை ஏறியுள்ளன. ஆனால் இந்த தேர்தலில் திமுகவிற்கும் சரி அதிமுகவிற்கு சரி வெற்றியை தேடித்தரக்கூடிய தலைவர் என்று யாரும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தாலும் தற்போது வரை அவர் மாஸ் லீடர் ஆகவில்லை. இதே போல் ஸ்டாலின் திமுக தலைவராக இருந்தாலும் அவர் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களிக்க பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை. இதனால் தேர்தல் வியூகம், பிரச்சாரம், கூட்டணி பலம், தேர்தல் பணி போன்றவைகள் தான் சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கப்போகிறது. அதிலும் கூட்டணி வியூகம் என்பது இந்த தேர்தலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு கட்சியுடனான கூட்டணி மூலம் ஒரு தொகுதிக்கு வெறும் 1000 வாக்குகள் கிடைக்கும் என்றால் கூட அந்த கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள திமுகவும் சரிஅதிமுகவும் சரி தயாராக உள்ளன.

இது போன்ற ஒரு சூழல் தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு இருந்தது. அப்போது திமுக ஆட்சியில் இருந்த சமயம். ஆட்சியை இழந்திருந்த ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வந்தார். திமுகவிற்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க அவர் ஆர்வம் காட்டி வந்தார். கலைஞரும் கூட கூட்டணிக்காக எதையும் விட்டுக் கொடுக்க தயாராக இருந்தார். அப்போது தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு பிறகு பலம் பொருந்திய கட்சியாக மூப்பனாரின் த.மா.கா இருந்தது. அந்த கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர ஜெயலலிதாவும், கலைஞரும் பிரம்ம பிரயத்தனம் செய்தனர்.

த.மா.கா யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சியே வெற்றி பெரும் என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில் கலைஞருக்கு டாடா காட்டிவிட்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார் மூப்பனார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அந்த தேர்தலில் கலைஞர், ஜெயலலிதா என இரு தலைவர்கள் இருந்தாலும் தேர்தல் வியூகம் தான் முக்கிய பங்காற்றியது. அந்த தேர்தலில் மூப்பனாரை கலைஞர் தனது கூட்டணியில் சேர்த்திருந்தால் நிச்சயமாக ஜெயலலிதா வெற்றி பெற்று இருக்க முடியாது. ஆனால் தொகுதிகளை வாரி வழங்கி மூப்பனாரை கூட்டணியில் சேர்த்து அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார் ஜெயலலிதா.

இதே பாணியில் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்கி ஆட்சியை தக்க வைக்கும் கனவில் எடப்பாடியார் உள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 140 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்துவது என்பது தான் எடப்பாடி தரப்பின் வியூகம் என்கிறார்கள். இதன் மூலம் எஞ்சிய 94 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தாராளமான பிரித்துக் கொடுக்க முடியும் என்று எடப்பாடியார் நம்புகிறார். அதிலும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு மனம் நோகாமல் தொகுதிகளை ஒதுக்கும் பட்சத்தில் அவர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றுவிடலாம் என்பதும் அவரது கணக்கு.

இதே பாணியில் தான் 2001 தேர்தலில் ஜெயலலிதா வெறும் 140 தொகுதிகளை அதிமுகவிற்கு வைத்துவிட்டு எஞ்சிய 94 தொகுதிகளை த.மாக, காங்கிரஸ், பாமக, இடதுசாரிகளுக்கு பிரித்துக் கொடுத்தார். எளிதாக தேர்தலில் வென்று ஆட்சிக் கட்டிலில் ஏறினார். அதனையே பின்பற்றி அதிக வாக்கு வங்கி கொண்டுள்ள பாமக மற்றும் தமிழகம் முழுவதும் பரலவாக வாக்கு வங்கி வைத்திருக்கும் தேமுதிகவிற்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராகி உள்ளது. பாஜக கூட்டணியில் தொடரும் பட்சத்தில் அவர்களுக்கும் கவுரவமான தொகுதிகளை கொடுப்பது என்பது எடப்பாடியாரின் கணக்கு.

மேலும் திமுக கூட்டணியில் எப்படியும் காங்கிரசுக்கு 40 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்குவார்கள் என்று எடப்பாடி கணக்கு போடுகிறார். அந்த 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளரை நிறுத்துவதுன் மூலம் கணிசமான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் என்றம் எடப்பாடியார் நம்புகிறார். இதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக அவசரம் காட்டாது என்கிறார்கள்.
 

click me!