
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து வரும் 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக தலைமையில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த மாதம் 19-ந் தேதி அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த கட்டண உயர்வு 20-ந் தேதி முதல் நடைமுறைக்கும் வந்தது. ஆனால், 100 சதவீத கட்டண உயர்வு என்பதால் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர்.
பஸ் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கடந்த 27-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், 29-ந் தேதி மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்னோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொண்டனர். திருநாவுக்கரசர், திருமாவளவன், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், அபுபக்கர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பஸ் கட்டண உயர்வை கண்டித்து வரும் 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்வார்கள் எனவும், பஸ் கட்ட உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள், நிர்வாகிகளை விடுதலை செய்வதுடன், வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்பதால், இக்கூட்டத்தில் பஸ் கட்டணம் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.