குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு !! ராஜினாமா செய்யும் 12 பாஜக எம்எல்ஏ.க்கள்… அதிர்ச்சியில் அமித்ஷா !!

By Selvanayagam PFirst Published Dec 20, 2019, 9:57 PM IST
Highlights


குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்கு  அசாமைச் சேர்ந்த 12 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். இப்பிரச்சனைக்காக  தங்கள் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது வருகிறது. இந்த குடியுரிமை சட்டத்தால வடகிழக்கு மாநில மக்களே பெரும்பாலும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உள்ளதால் அசாம் திரிபுரா போன்ற மாநிலங்களில் மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் முதல் மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

இதனால் அசாம் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜகவினருக்கு ஆட்டம் கண்டுள்ளது. முதலமைச்சர் சோனோவால் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. பிரசாந்த் ஆகியோரது வீட்டின் மீது போராடும் மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள 12 பா.ஜ.க., எம்.எல்.ஏக்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அசாம் மாநில மக்களின் போராட்டம் நியாயமானதுதான். அவர்களின் கலாச்சார, பண்பாடு மற்றும் அவர்களின் நலன் மிகவும் முக்கியமானதாகும் எனக் கூறி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய 12 எம்.எல்.ஏக்களில் ஒருவரான பத்மா ஹசாரிகா, “குடியுரிமை சட்டத்திருத்தம் பா.ஜ.க.,வின் கொள்கையாக இருக்கலாம் ஆனால் அசாம் மாநில மக்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம்.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு பதில் வேறு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும். இந்த பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இதற்காக நாங்கள் 12 பேரும் எங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளோம்.” என தெரிவித்துள்ளனர். இது அமித்ஷாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!