கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.. தேர்வு ரத்து காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு.. முதல்வரை விமர்சித்த கேப்டன்!

By vinoth kumarFirst Published Jun 9, 2020, 4:56 PM IST
Highlights

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்த முடிவு காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார். 

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்த முடிவு காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா அச்சத்தால் மாணவர்களை பெற்றோர்கள் அனுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து குழப்பத்தில் இருந்து வந்தனர். 10ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனாலும், 10ம் பொதுத்தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டி வந்தது. 

இதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் காட்டமாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பான வழக்கில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டது. அப்போது, வரும் மாதங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தேர்வு நடத்த இதுவே உகந்த தருணம் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்து அனைவரும் தேர்வு பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர் வரவேற்றனர். 

இது தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்;- அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அண்டை மாநிலமான தெலங்கானா, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல் ஹால் டிக்கெட், தேர்வு எழுதும் மையங்கள் என அனைத்தையும் ஏற்பாடு செய்த பிறகு, காலம் கடந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

click me!