கருணை அடிப்படையில் பணி பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.. ரயில்வே அதிரடி.. மதுரை எம்.பி உருக்கமான கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 23, 2021, 12:41 PM IST
Highlights

பெரும்பாலானவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வாகிவிட்டார்கள், இன்னும் சில பேர் தேர்வாக முடியாத நிலையில் உள்ளார்கள். அவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் மே மாதம் வரை தேர்வதற்கான அவகாசம் அளித்துள்ளது.

கருணையின் அடிப்படையில் தரப்பட்ட வேலைக்கு அவர்கள் தேர்வெழுதி தேர்ச்சி பெற மேலும் ஒருவருடம் கால அவகாசம் தரவேண்டும் என இரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் இறந்தால் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை தரப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு. 2012 வாக்கில் இந்த கல்வித்தகுதி தளர்த்தப்பட்டது .எட்டாம் வகுப்பு தேர்வாகியிருந்தால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை தரப்பட்டது. ஆனால் அவர் ஐந்து ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்வாகி சான்றிதழ் அளிக்க வேண்டும். பெரும்பாலும் எட்டாம் வகுப்பு தேர்வாகி வேலைக்கு வந்தவர்கள் தண்டவாள பராமரிப்பு வேலையில் ஈடுபடும் சாதாரண தண்டவாள பராமரிப்பு ஊழியர்கள் ஆகும்.

 

இவர்கள் கிராமப்புற பின்னணியும் கல்வித்தகுதி குறைவானவர்கள் ஆகவும் இருக்கிற காரணத்தால் தங்கள் பிள்ளைகளை சரிவர படிக்கவைக்க இயலாத சூழ்நிலையில் இருந்தார்கள். எனவே இந்தத் தளர்வு செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது அது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு இருந்தால்தான் வேலை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் கருணை அடிப்படையில் அமர்த்தப்பட்ட பத்தாம் வகுப்புக்கு குறைவான கல்வித் தகுதி உடையவர்கள் பெரும்பாலானவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வாகிவிட்டார்கள், இன்னும் சில பேர் தேர்வாக முடியாத நிலையில் உள்ளார்கள். அவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் மே மாதம் வரை தேர்வதற்கான அவகாசம் அளித்துள்ளது. 

அதற்குள் அவர்கள் தேர்வாகிவிட வேண்டும் இல்லையென்றால் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளது. இது தொடபாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில், “இன்னமும் பத்தாம் வகுப்பு தேராத அத்தகைய ஊழியர்கள் ஒரு சில பேரே இருக்கிற காரணத்தை முன்னிட்டு அவர்களுக்கு ஒருமுறை விதிவிலக்கு அளித்து அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களின் கிராமப்புற பின்னணியை கணக்கில் கொண்டு இந்த விதிவிலக்கு அளிக்க வேண்டும். ஒருவேளை அது சாத்தியமில்லையென்றால் தேர்ச்சி பெறுவதற்கு மேலும் ஓராண்டு காலம் அவகாசம் அளித்திட வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளார். 

click me!