உயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு … அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் !! மத்திய அரசு அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jan 7, 2020, 11:25 PM IST
Highlights

உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், , மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2019ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்குத் தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

அதுபோன்று தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
இதுபோன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் காங்கிரஸ் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் 103ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2019 ஐ அமல்படுத்தக் கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தெரிவித்தார்.

இதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பதில் அளித்துள்ளது. “பழங்குடியினர் மற்றும் சமூகம், கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் இல்லாத ஏழை மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் 10 சதவிகித இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். அதில், மத்திய அரசு தலையிட முடியாது. 10 சதவிகித இட ஒதுக்கீடு மத்திய அரசின் துறைகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

click me!