1 வருடம் மரண படுக்கை.. கொரோனா தடுப்பூசியால் எழுந்து உட்கார்ந்த பக்கவாத நோயாளி.. மருத்துவர்கள் ஆச்சர்யம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2022, 1:12 PM IST
Highlights

இந்நிலையில்தான் ஜனவரி 6ஆம் தேதி சுகாதார பணியாளர்கள் அவருக்கு கோவி ஷீல்ட் தடுப்பூசி செலுத்தினர். இதனை அடுத்து ஜனவரி 9ஆம் தேதி அவர் திடீரென எழுந்து நடக்கத்  தொடங்கினார். 

ஒரு வருடத்துக்கும் மேலாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருந்த நபர் கொரோனா தடுப்பூசியால் முற்றிலும் குணமடைந்து எழுந்து நடமாடும்  நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்திகள் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பல லட்சங்களை செலவழித்தும் பலன் இல்லாத நிலையில் ஒரே ஒரு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அந்த நபர் குணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 

இந்தியாவில் இரண்டு அலைகள் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் கடந்த இரண்டாவது அலையின் போது பாதிப்பு அதிகமாக இருக்க காரணமாக இருந்தது. அதேபோல தற்போது ஒமைக்ரான் என்ற வைரஸ் மூன்றாவது அலைக்கு வழி வகுத்திருக்கிறது. டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் மூன்று மடங்கு அதி வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன. இந்நிலையில் கடந்த 200 நாட்களில் இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலை உள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ளவர்களும் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக முதல் அலை, இரண்டாவது அலை,  மூன்றாவது அலை என எத்தனை அலைகள் வந்தாலும் தடுப்பூசி மட்டுமே அதில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் என்பதால் நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணைத் தடுப்பூசியும்,  60 சதவீதத்தினர் இரண்டாவது தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர். இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தொற்றினால் பாதிக்கப்படுதல் மற்றும் அதன் தீவிரத் தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் இதுவரை 8.83 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மாரடைப்பு ஏற்பட்டு விடும்,  ரத்தம் உறைந்து விடும் என்றெல்லாம்  நெகட்டிவ் வதந்திகள் பரவி வந்த நிலையில்.. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் மரணப்படுக்கையில் இருந்தவர் எழுந்து நடமாடி வருகிறார் என்ற பயங்கர பாசிட்டிவ் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.  ஜார்கண்ட் மாநிலத்தில் பெதர்வார் தொகுதியின் தகாஹா கிராமத்தைச் சேர்ந்தவர் துலர் சந்து முண்டா (55) இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் காயமடைந்தார். மூன்று ஆண்டுகளுக்கு கழித்து அவரது உடம்பில் நரம்புகளில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக படுத்த படுக்கையில் வாய் பேச முடியாமல், படுக்கையிலிருந்து நகரக்கூட முடியாமல் இருந்துவந்தார். இதனால் அவரது உறவினர்கள் பொகாரோ, தன்பாத் மற்றும் ராஞ்சியில் RIMSல் சிகிச்சை அளித்து வந்தனர். இதுவரை அவருக்கு 4 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவரது சொந்த நிலங்கள் விற்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு நோய் குணமாகவில்லை.

இந்நிலையில்தான் ஜனவரி 6ஆம் தேதி சுகாதார பணியாளர்கள் அவருக்கு கோவி ஷீல்ட் தடுப்பூசி செலுத்தினர். இதனை அடுத்து ஜனவரி 9ஆம் தேதி அவர் திடீரென எழுந்து நடக்கத்  தொடங்கினார். அவர் குணமானதை அறிந்து அவரது உறவினர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இந்த செய்தி அம்மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தடுப்பூசி போட்ட உடனே உடலில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்யாமல் இந்த விஷயத்தில் எதுவும் கூற முடியாது என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது 
 

click me!