’முதல்வர் பதவியைக் கைப்பற்ற நள்ளிரவு யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்?

By Muthurama LingamFirst Published Jan 20, 2019, 1:09 PM IST
Highlights

'’ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல், கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதல்-அமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்’’ என்று ஓ.பி.எஸ்சின் நள்ளிரவு யாகத்தின் மர்மம் உடைக்கிறார் மு.க.ஸ்டாலின்.
 

'’ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல், கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதல்-அமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்’’ என்று ஓ.பி.எஸ்சின் நள்ளிரவு யாகத்தின் மர்மம் உடைக்கிறார் மு.க.ஸ்டாலின்.

சோழிங்க நல்லூரில் இன்று காலை நடந்த அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் ’’கொடநாடு விவகாரத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சயன், மனோஜ் ஆகிய இருவரும் சமீபத்தில் பேட்டி கொடுத்தனர். அதில் எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி வந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும். நான் குற்றமற்றவன், அப்பழுக்கற்றவன். என் மீது புகார் தெரிவிக்க யாருக்கும் தகுதி இல்லை என்று கூறி இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூவை பிடித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை செய்யாமல் ஜாமீனில் வெளியே வந்திருந்த சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்த செய்துள்ளார். ஆனால் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களை சிறையில் அடைக்காமல் ஜாமீனில் அனுப்பிவிட்டது.

கொடநாடு விவகாரத்தில் நியாயமாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு தன்னை ஆட்படுத்தி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நான் குற்றம் சொல்வதால் என் மீது அவர் வழக்கு போடத் தயாரா? இப்போது இன்னொரு செய்தி வருகிறது. அது தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் என்பதுதான்.

எதற்கு இந்த யாகம்? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல் கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதல்-அமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.
முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும்’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

click me!