திருவள்ளுவருக்கு மதச்சாயம்..! இந்தியளவில் ட்ரெண்டான #BJPInsultsThiruvalluvar ஹாஸ்டேக்..!

By Manikandan S R SFirst Published Nov 3, 2019, 5:17 PM IST
Highlights

தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவரை காவி உடையில் வெளியிட்ட புகைப்படம் பலத்த சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

தாய்லாந்து நாட்டிற்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாங்காக்கில் இன்று நடைபெற்ற இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டார். இதைப்போல கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நாளை நடைபெறுகிறது. அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

நேற்று பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் குழுமியிருந்த இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தாய்லாந்தின் தாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அவர் பேசும்போது ‘தமிழ் மொழியின் மிகச் சிறந்த நூலான திருக்குறளின் மொழி பெயர்ப்பு தாய்லாந்து மக்கள் வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்துவதற்கு வழிகாட்டியாக அமையும்' என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?

அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)


இந்தநிலையில் பிரதமர் மோடி தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டதை கொண்டாடும் விதமாக தமிழக பாஜக, தங்களது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டிருந்தது. இது பலத்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. திருவள்ளுவருக்கு பாஜக மதச்சாயம் பூச முற்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சமூக ஊடகங்ளிலும் இதுதொடர்பான விவாதங்கள் சூடாக நடந்து வருகின்றன. பலர் பாஜகவை விமர்சித்து கருத்துகள்  தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் #BJPInsultsThiruvalluvar என்கிற ஹாஸ்டேக் தற்போது இந்தியளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதை பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்.

click me!