
இன்றைய நவீன காலத்தில், மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள் நமக்கு தந்த பரிசு சர்க்கரை வியாதி. உலகில் 40 வயதை தாண்டிய பலரில் நீரிழிவு நோய் இல்லாத நபர்கள் வெகு குறைவு. பொதுமக்கள் பலரிடம் தவறாமல் இடம்பிடிக்கும் நோய்களின் பட்டியலில் நீரிழிவு நோய்க்கு தான் முதலிடம் என்றே கூறலாம். \
சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை சேர்வதே ஆகும். அதாவது, நமது உடல் இன்சுலினை எதிர்க்கும் போதோ அல்லது உடலில் போதுமான அளவு இன்சுலின் இல்லாதது தான் சர்க்கரை வியாதி என்கிறோம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை எனில் உடலில் உள்ள இதயம், இரத்த நாளங்கள், கண்கள் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் மோசமான நிலையை சந்திக்க நேரிடும்.
பொதுவாக நீரிழிவு நோயை நிரந்தரமாக குணப்படுத்திவிட முடியாது. ஏனென்றால் சரியாக சொல்ல வேண்டும் எனில் இதை நோய் என்றே வகைப்படுத்த முடியாது. இது ஒரு வகை குறைபாடு மட்டுமே. சரியான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை கடைப்பிடிப்பதன் மூலமாகவும் இந்த குறைபாட்டை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
டைப் 1 நீரிழிவு நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் கெஸ்டேஷனல் நீரிழிவு ஆகிய பிரச்சினைகள் குறித்து நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஏன் என்றால் பெரும்பாலான மக்களை தாக்குவது இந்த வகை நீரிழிவு குறைபாடுகள் மட்டுமே. ஆனால், அரிதிலும் அரிதாக சிலரை தாக்கும் டைப் 3 நீரிழிவு நோய் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த செய்தியின் மூலமாக நாம் அதை தெரிந்து கொள்ளலாம்.
டைப் 3 நீரிழிவு:
சிலர் அல்சைமர் நோயை டைப் 3 வகை நீரிழிவு என்று குறிப்பிடுகின்றனர். அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான மூளைக் கோளாறு. இது பொதுவாக 60- 70 வயதுடைய மாக்களுக்கு ஏற்படும். 65 வயதிற்கு குறைவான நபர்களுக்கு மிகவும் அரிதாக ஏற்படலாம். அவ்வாறு ஏற்படுவதை ஆரம்பகால அல்சைமர் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
டைப் 3 நீரிழிவு நோய் என்றால், டைப் 2 வகை நீரிழிவு பாதிப்பு மற்றும் கூடுதலாக அல்சைமர் பிரச்சினை இருப்பது ஆகும். இதன் விளைவாக, இன்சுலின் எதிர்ப்பு காரணமாக மட்டுமே இந்தப் பிரச்சினை ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஆனால், டைப் 3 வகை நீரிழிவு நோய்க்கு உண்மையான காரணத்தை மருத்துவ சமூகம் இதுவரை கண்டறியவில்லை.
டைப் 3 நிரிழிவு நோயின் அறிகுறிகள்:
1. நினைவாற்றல் மங்குவது, சிந்திக்கும் திறனை இழப்பது , மொழியில் சிக்கல்களால் பாதிக்கப்படுவது, மனநிலை நிலையில்லாமல் அவ்வப்போது மாறுவது .
2. அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்கான திறனை முழுவதுமாய் இழப்பது.
3. தொடர்ச்சியாக பொருட்களை வைத்த இடம் குறித்து மறந்துவிட்டு தேடிக் கொண்டிருப்பது.
4. திடமாக முடிவு எடுக்க முடியாமல் குழப்பம் அடைவது.
அல்சைமர் நோய் மற்றும் பெரும்பாலான டிமென்ஷியா நோய் அறிகுறிகளை குணப்படுத்தப்படாத சூழ்நிலையில் இருப்பதால், அல்சைமரிலிருந்து மீளமுடியாது எனபதே நிதர்சனமான உண்மை. ஆனால், ஒரு சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரம் 4 நாட்களாவது இதைச் செய்வது அவசியம். குறைந்த சேச்சுரேடட் கொழுப்பு மற்றும் அதிக புரதச்சத்து, நார்ச்சத்து உடைய உணவை சாப்பிட வேண்டும். டைப் 2 நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்து கொள்ள வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.