வீட்டில் உள்ள பொருள் பழுதடைந்தால், குப்பையில் வீசிவிட்டு புதிய பொருளை வாங்குவோம். உடலில் உள்ள உறுப்புகள் சேதமடைந்தாலும், அவற்றை மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு மருத்துவ உலகம் முன்னேறியுள்ளது.
சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரக ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அதனால் தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும், சிறுநீரக தானத்துக்கும் மருத்துவ உலகில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இறந்த அல்லது உயிருடன் இருக்கும் நபரிடமிருந்து சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, நோயாளிக்கு மாற்றப்படுகிறது. ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயனற்ற சிறுநீரகத்தை மருத்துவர் என்ன செய்வார் என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு. அதுகுறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான காரணம்
சிறுநீரகம் செயலிழந்த பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த இரு நோய்களின் தாக்கம் காரணமாக ரத்த நாளங்களை சேதமடைந்து, சிறுநீரகம் வேலை செய்வதை நிறுத்துகிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தவிர, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் மது அருந்துதல் ஆகியவையும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள்
ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பு பொதுவாக எந்த அறிகுறிகளும் தென்படுவது கிடையாது. அதிகப்படியான சோர்வு, குமட்டல் மற்றும் வாந்தி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கை, கால் மற்றும் முகம் வீக்கம், தசைப்பிடிப்பு, பசியின்மை போன்ற அறிகுறிகள் மெதுவாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன. இதையடுத்து சிறுநீரக செயலிழப்புக்கான பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
உடல்நலம் இல்லாமல் ஜிம்மிற்கு செல்கிறீர்களா? மாரடைப்பு நேரிடலாம்... ஜாக்கிரதை..!!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?
சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது உங்கள் உடலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான சிறுநீரகத்தை இடமாற்றம் செய்வதாகும். ஒரு புதிய சிறுநீரகம் இறந்த நபரின் உடலில் இருந்து அல்லது தானம் செய்ய விரும்பும் ஆரோக்கியமான நபரின் உடலில் இருந்து எடுக்கப்படுகிறது. சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகள் டயாலிசிஸ் நோயாளிகளை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
பயனற்ற சிறுநீரகத்திற்கு என்ன நடக்கும்?
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது, பயனற்றுப் போன சிறுநீரகத்தை மருத்துவர்கள் அகற்றுவது கிடையாது. அது அப்படியே உடலிலேயே வைக்கப்படும். புதியதாக வைக்கப்படும் சிறுநீரகம் அடிவயிற்றின் கீழ் முன்னோக்கி இடமாற்றம் செய்யப்படுகிறது. ஒருவேளை பயனற்ற சிறுநீரகம் பெரிதாகிவிட்டாலோ அல்லது சிறுநீரகத் தொற்று ஏற்பட்டாலோ மட்டுமே, அவை உடலில் இருந்து அகற்றப்படும். ஆனால் அதுபோன்ற பாதிப்பு ஏற்படுவது குறைவுதான் என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க இதைச்செய்தால் போதும்..!!
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான செலவு எவ்வளவு?
நீங்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறீர்கள் என்பதை பொறுத்து, இதற்கான சிகிச்சை செலவீனங்கள் அமைகின்றன. இதில் மருத்துவ உரிமை காப்பீடும் முன்னிலை வகிக்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் 4 முதல் 7 லட்சம் ரூபாய் வரையிலும், தனியார் மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் என தகவல்கள் கூறுகின்றன.
ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். அதிக வலி மாத்திரைகளை உட்கொள்வது, அதிக உப்பு மற்றும் இனிப்புகளை உட்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது மற்றும் மது அருந்துவது ஆகியவை சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.