பழங்காலக் கோயில்கள், அமைதியான கடற்கரைகள், பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை அற்புதங்கள் என ஒவ்வொரு மூலையிலும் பார்க்க வேண்டிய இடங்கள் தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சிறந்த 10 சுற்றுலா இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை
சென்னை தமிழகத்தின் தலைநகரம் என்பதால், சென்னை நவீன டெக்னலாஜிக்கான இடமாக மட்டுமல்லாமல், பாரம்பரியத்தின் இடமாகவும் இன்றளவும் திகழ்ந்து வருகிறது. மெரினா கடற்கரையின் அழகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கபாலீஸ்வரர் கோயிலின் கட்டிடக்கலை மற்றும் சான் தோம் கதீட்ரலின் காலனித்துவ வடிவமைப்பை பார்த்து ரசிக்கலாம்.
மகாபலிபுரம்
மகாபலிபுரம் வங்காள விரிகுடாவிற்கும், பெரிய உப்பு ஏரிக்கும் இடையே உள்ள நகரம் ஆகும். கடற்கரை கோயில் மற்றும் ஐந்து ரதங்கள் உட்பட இங்குள்ள நினைவுச்சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களாகும். மகாபலிபுரம் பழங்கால பல்லவக் கலையின் அடையாளமாக திகழ்கிறது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகவும் உள்ளது.
மதுரை
'கிழக்கின் ஏதென்ஸ்' என்று அழைக்கப்படும் மதுரையின் சிறப்பம்சம், பிரமிக்க வைக்கும் மீனாட்சி அம்மன் கோயில் அழகிய கோபுரங்களுடன் உள்ளது. மதுரை என்பது கோவில்கள் மட்டுமல்ல. மதுரையின் குறுகிய சலசலப்பான தெருக்களில் நடந்து சென்றால் துணிக்கடைகள், வெள்ளி வியாபாரிகள், புதிய பொருட்களை விற்கும் சந்தைக் கடைகள், நறுமணம் மணக்கும் மசாலா கடைகள் மற்றும் பலவற்றைக் கடந்து, உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பார்க்க முடியும். தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் மதுரையும் ஒன்று.
ஊட்டி
நீலகிரியில் உள்ள மலைவாசஸ்தலம், ஊட்டி 'குயின் ஆஃப் தி ஹில்ஸ்' என்றும் அழைக்கப்படும். தேயிலை தோட்டங்கள் மற்றும் பனிமூட்டமான சரிவுகளின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை வழங்குகிறது. தாவரவியல் பூங்கா மற்றும் ஊட்டி ஏரி படகு சவாரி ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இயற்கையை ரசிக்க வைக்கும் ரயில் பயணம் மிஸ் பண்ணக்கூடாது இடங்களாகும்.
கொடைக்கானல்
மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் அருவிகள், அமைதியான ஏரிகள் மற்றும் மலைகள் என இயற்கை காட்சிகளால் சூழப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றி நடக்கவும், கோக்கர்ஸ் வாக்கில் இருந்து பரந்த காட்சிகளைக் கண்டு மகிழுங்கள். அனைவரையும் வசீகரிக்கும் சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுங்கள். நீங்கள் இயற்கை ஆர்வலராக இருந்தால், பிரையன்ட் பூங்காவிற்குச் செல்லுங்கள். இது அழகாக பராமரிக்கப்படும் தாவரவியல் பூங்கா ஆகும். இந்த மலையானது தமிழ்நாட்டில் குடும்பமாகச் செல்ல சிறந்த இடங்களில் ஒன்றாகும்.
கன்னியாகுமரி
இந்தியாவின் தென்முனையில், மூன்று கடல்கள் சந்திக்கும் இடத்தில், கன்னியாகுமரி அதன் கண்கவர் சூரிய உதயங்களுக்கும், சூரிய அஸ்தமனத்திற்கும் பெயர் பெற்றது. கடலுக்கு நடுவே கம்பீரமாக நிற்கும் விவேகானந்தர் பாறை நினைவகம், உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை ஆகியவை மிஸ் பண்ணாமல் பார்க்கக்கூடிய இடங்களாகும்.
தஞ்சாவூர்
சோழப் பேரரசின் தலைநகராக இருந்த தஞ்சாவூர், சோழர்களின் கட்டிடக்கலையின் உச்சக்கட்டத்தை பிரதிபலிக்கும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இருக்கிறது. தஞ்சாவூர் அரண்மனை மற்றும் கலைக்கூடத்தைத் தவறவிடாதீர்கள். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான தஞ்சாவூர் வரலாற்று ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.
ராமேஸ்வரம்
இந்தியாவின் புனிதமான இந்து தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் பக்தர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இந்து இதிகாசமான ராமாயணத்தின் புராணக் கதைகளில் ராமேஸ்வரம் முக்கிய இடமாக உள்ளது. அரக்க அரசன் ராவணனிடம் இருந்து தன் மனைவி சீதையை மீட்பதற்காக இலங்கைக்கு கடலின் குறுக்கே ராமர் 'ராம சேது' என்ற பாலத்தை கட்டிய இடம் இது என்று நம்பப்படுகிறது. ராமநாதசுவாமி கோயில், அதன் அலங்கரிக்கப்பட்ட நடைபாதைகள் மற்றும் அமைதியான கடற்கரைகள், குறிப்பாக தனுஷ்கோடியை தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் தொழில், ஜவுளி மற்றும் கல்விக்கான முக்கிய மையமாகும். தொழில்முனைவோருக்குப் பெயர் பெற்ற நகரம், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது கோவை மாநகரம். முருகப்பெருமானின் புகழ்பெற்ற தலமான மருதமலை கோவில் கோவையில் உள்ளது.
செட்டிநாடு
செட்டியார்களின் நிலம் அதன் ஆடம்பரமான பாரம்பரிய மாளிகைகளுக்கு பெயர் பெற்றது ஆகும். விக்டோரியன் மற்றும் திராவிட பாணிகளின் கட்டிட கலவையைக் காட்டுகிறது. காரமான மற்றும் நறுமண உணவுகளுக்கு பெயர் பெற்றது செட்டிநாட்டு உணவு வகைகள் ஆகும். செட்டிநாட்டு கோழி குழம்பு, மீன் குழம்பு, கோழி வருவல், மற்றும் செட்டிநாடு மட்டன் கறி ஆகியவை மறக்காமல் சாப்பிட கூடிய உணவுகளாகும்.
அசைவ உணவு மட்டுமின்றி, செட்டிநாடு அதன் சைவ உணவுகளான செட்டிநாடு குழம்பு, காய்கறிப் பிரட்டல் மற்றும் பலவற்றிற்கும் சமமாகப் பிரபலமானது. குறிப்பாக கண்டாங்கி புடவைகள் எனப்படும் காட்டன் புடவைகள் உலகம் முழுவதும் இடம்பெற்றுள்ளது. செட்டிநாடு கட்டிடக்கலை மற்றும் உணவு பிரியர்களுக்கு தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.