காலை உணவை ஸ்கிப் பண்றீங்களா? அப்ப இது தான் நடக்கும்... ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

By manimegalai aFirst Published Jan 8, 2022, 1:42 PM IST
Highlights

உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

காலை உணவை தவிர்ப்பது, தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல பாதிக்கச்செய்ய வழிவகை செய்கிறது. ஆம், ஒருவர் தன்னுடைய காலை உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது அவர்களுக்கு நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, அனைத்துப் பணிகளையும் செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக காலை உணவை ஏதாவது ஒன்றைச் சாப்பிடக்கூடாது. முட்டை, கீரை, பருப்பு போன்ற நல்ல சத்தான உணவுப்பொருள்களைச் சாப்பிடும் போது மட்டும்தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.  

காலை உணவைத் தவிர்ப்பதால் நமது உடல் இயங்கியலில் நடைபெறும் மாறுதல்கள் என்ன?

உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்றும் பலர் 'நேரமில்லை' என்றும் காலை உணவை தவிர்க்கிறார்கள். காலை உணவைத் தவிர்ப்பதால் நமது உடல் இயங்கியலில் நடைபெறும் மாறுதல்கள் என்ன? மாறுதல்களால் உண்டாகும் பாதகங்கள் என்ன?


 
இது தொடர்பாக காலை உணவைத் தவிர்த்தவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாக இருந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 'காலையில் தவறாமல் சாப்பிடுகிறீர்களா' என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் அதிகரிப்பதாக    தெரிவிக்கிறது.

சர்க்கரை நோய்:

காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில்  பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது, குளுக்கோஸ்-இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும். சில மாதங்கள் கழித்து ’இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ (Insulin resistance) ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக  நாமும் மாறிவிடுவோம். 

உடற்பருமன்:

உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயருமே தவிர, குறைவது கடினம். காலை உணவைத் தவிர்ப்பவர்கள், ஆரோக்கியமற்ற நொறுவை வகைகளின் மீது அதிக இச்சை கொண்டவர்கள் ஆவார்கள்.

ஹார்மோன் மாற்றங்கள்:

உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் டோபமைன் (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற குறிகுணங்கள் போகப் போக வெளியாகத் தொடங்கும். உணவைத் தவிர்க்கும்போது, பசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் (Ghrelin) ஹார்மோன் மற்றும் 'சாப்பிட்டது போதும்' என்ற உணர்வைக் கொடுக்கக்கூடிய லெப்டின் (Leptin) ஹார்மோனின் இயல்பு நிலையிலும் பல மாறுதல்கள் ஏற்படும். லெப்டின் ஹார்மோனின் அளவு குறைந்து, கெர்லின் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்போது, பசி உணர்வு அவ்வளவு சீக்கிரம் அடங்காது.  

மூளையின் ஆற்றலுக்கு:

குளுக்கோஸிலிருந்து கிடைக்கும் ஆற்றலை அதிகம் எதிர்பார்ப்பது  மூளை ஆகும். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. 

வாய் நாற்றம்:

காலை உணவை மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம் (கிருமிநாசினி செய்கையுடையது), வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கும் செரிமானச் சுரப்பிகளை உணவு ஆசுவாசப்படுத்தாதபோது, வயிற்றுத் தசைகளில் படர்ந்திருக்கும் மென்படலத்தில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகும். 

முந்தைய நாள் இரவு முதல், அடுத்த நாள் மதியம் வரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் 
நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும். காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது, செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது. உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வும், மந்தமான நிலையும் நம்மைப் பற்றிக்கொள்ளும்.

 எனவே, மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி உடலினை நல்ல ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம்.
 

click me!