பசியுடன் பள்ளி வாசலில் காத்திருந்த சிறுமி..! வைரலான புகைப்படத்தால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

By Manikandan S R SFirst Published Nov 10, 2019, 4:46 PM IST
Highlights

சிறுமியின் வீட்டிற்கு சென்ற அந்த அமைப்பினர் ரேவதி இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாதது குறித்து விசாரித்துள்ளனர். இதையடுத்து அதே பள்ளியில் சிறுமியை சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. செய்தி வெளியான அதே நாளில் சிறுமி ரேவதி புதிய சீருடையுடன் உணவுக்காக காத்திருந்த பள்ளிக்கு கல்வி கற்பதற்காக சென்றார்.

கையில் சாப்பிடும் தட்டுடன் வகுப்பறை ஒன்றின் வாசலில் சிறுமி நிற்கும் அந்த புகைப்படத்தை பார்த்தால் சற்று கலங்கத்தான் செய்கிறது. அப்படி கலங்கி போய் ஸ்ரீனிவாஸ் புகைப்படம் எடுத்து பரவவிட, அது சிறுமி ஒருவரை கல்வி கற்க வழிவகை செய்துள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். புகைப்பட கலைஞரான இவர் அங்கிருக்கும் ஒரு முன்னணி ஊடகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த புதன்கிழமையன்று குடிமால்கபூர் என்னும் பகுதியில் டெங்கு பாதிப்புகள் குறித்து புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அந்த பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் டெங்கு பாதிப்பை தவிர்க்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஸ்ரீனிவாஸ் தனது இருசக்கர வாகனத்தை பள்ளியின் வாசலில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் கையில் தட்டுடன் பரிதாபமாக பள்ளியை பார்த்தவாறு நின்றிருக்கிறார்.

அதைப்பார்த்து ஒருகணம் கலங்கிய அவர், உடனடியாக தனது கேமராவில் அந்த சிறுமியை படம் பிடித்தார். அதன்பிறகு சிறுமியிடம் பேச்சு கொடுத்த ஸ்ரீனிவாஸ், 'எதற்காக இங்கு காத்துக்கொண்டிருக்கிறாய்.. பள்ளிக்குள் செல்லவில்லையா?' என வினவியிருக்கிறார். அதற்கு சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் தான் அந்த பள்ளியில் படிக்கவில்லை எனவும் பதிலளித்துள்ளார். தினமும் பள்ளியில் மிச்சமாகும் மதிய உணவை வாங்கி சாப்பிட வருவதாக சிறுமி கூற ஸ்ரீனிவாஸ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மறுநாளே தான் பணிபுரியும் ஊடகத்தில், இதுசம்பந்தமான செய்தியை "பசியின் பார்வை" என்கிற தலைப்பில்  சிறுமியின் புகைப்படத்துடன் வெளியிட்டார். அது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்கும் ஒரு சமூக நல அமைப்பின் கவனத்திற்கு இந்த செய்தி சென்றுள்ளது. அவர்கள் உடனடியாக ஸ்ரீனிவாஸின் உதவியுடன் சம்பந்தப்பட்ட சிறுமியை தேடித் சென்றனர். சிறுமியின் வீட்டிற்கு சென்ற அந்த அமைப்பினர் ரேவதி இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாதது குறித்து விசாரித்துள்ளனர். பின் அந்த அமைப்பின் மூலமாக அதே பள்ளியில் சிறுமியை சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. செய்தி வெளியான அதே நாளில் சிறுமி ரேவதி புதிய சீருடையுடன் உணவுக்காக காத்திருந்த பள்ளிக்கு கல்வி கற்பதற்காக சென்றார்.

சிறுமி ரேவதியின் தந்தை பெயர் லட்சுமண். தாயார் யசோதா. இருவருமே குப்பை அள்ளும் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அதில் இளையவள் தான் ரேவதி. தினமும் காலை 6 மணிக்கெல்லாம் இருவரும் பணிக்கு சென்றுவிட, ரேவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்திருக்கிறார். மதிய உணவிற்காக அருகே இருக்கும் பள்ளிக்கு செல்வதே ரேவதிக்கு தினமும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. சிறுமியின் தந்தை லட்சுமணனிடம்  அந்த அமைப்பினர் பேச்சுக்கொடுத்துள்ளனர். "என் பெரிய பொண்ணு ஏற்கனவே ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா. இவளையும் படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆச. அதுக்காக இந்த வருச ஆரம்பத்துலயே ஸ்கூல்ல போய் கேட்டோம். ஆனா 5 வயசுக்கு குறைவா இருக்கவங்கள இப்போ சேர்க்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. இல்லனா அப்பவே சேர்த்திருப்போம். இப்ப அவ ஸ்கூலுக்கு போறது சந்தோசமா இருக்கு " என்றார் வெகுளியாக.

வயிற்று பசியுடன் பள்ளியின் வாசலில் காத்திருந்த சிறுமி, இன்று அதே பள்ளியில் கல்வி எனும் காலத்தால் அழியாத அறிவு பசியை நிரப்பச் பெற சென்றுள்ளார்.

click me!